நேர்காணல்: இன்ஜின் உதவி இல்லாமல் மோட்டார் பிரேக்!
நவீன கால பிரேக் அமைப்புகளை உருவாக்க, பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் என்ன முயற்சி எடுக்கிறது?
அதிவேக கார்களுக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 'அப்போஸ்டு பிஸ்டன் கேலிப்பர்' என்ற புதிய பிரேக் அமைப்பை, நடப்பாண்டு ஜனவரியில் நடந்த வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தினோம். இந்த அமைப்பு, காரின் காற்று இழுவை குணத்தை குறைத்து, அதிக பிரேக் அழுத்தத்தை வழங்கும் திறன் உடையது. அதேபோல், 'மோட்டார் ஆன் டிரம்', 'மோட்டார் ஆன் கேலிப்பர்' ஆகிய மோட்டார் வாயிலாக இயங்கும் பிரேக் அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம். அடுத்த இரு நிதியாண்டுகளுக்குள் இந்த பிரேக் அமைப்புகள் உற்பத்திக்கு வரும். 2030க்குள் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதே?
நாடு முழுதும் உள்ள உற்பத்தி ஆலைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, திருவள்ளூர் தேர்வாய் கண்டிகை ஆலையில், கனரக வாகன பிரேக் உற்பத்தியையும், குஜராத்தின் ஜகாடியா மற்றும் ஹரியானாவின் பாவல் ஆலைகளில், இலகு ரக வாகன பிரேக் உற்பத்தியையும் விரிவாக்கம் செய்ய இது உதவுகிறது. மேலும், ஜப்பானின் 'ஆட்விக்ஸ்' என்ற நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் 'பீயாட்ஸ்' என்ற தனி நிறுவனத்தை உருவாக்கி உள்ளோம். கிருஷ்ணகிரியின் சூளகிரியில், இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது. இங்கு, 'எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்' மற்றும் 'பிரேக் இ - பூஸ்டர்' அமைப்புகள் உற்பத்தியாக உள்ளன. இதற்கு, 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 300க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பிரேக்ஸ் இந்தியா அதிகம் கவனம் செலுத்தும் பகுதி எது?
இன்ஜின் உதவி இல்லாமல், 'எலட்ரானிக் பிரேக்'குகளை உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். அடாஸ் பாதுகாப்பை லெவல் 1ல் இருந்து லெவல் 5ற்கு அதிகரிப்பது, நவீன சிமுலேஷன் வாயிலாக தொழில்நுட்பம் உருவாக்கும் நேரத்தை குறைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறோம். உலகளவில் ஏற்றுமதி பங்கை அதிகரிக்க, என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன?
தற்போது, 1,500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 2030 வரை, 16 சதவீதம் அளவுக்கு, ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சியை எட்ட இலக்கு வைத்துள்ளோம். 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உலகளவில் அசல் உபகரண உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள ஜப்பான், ஜெர்மனி மற்றும் தென் கொரிய சந்தைகளில் எங்களுக்கு வலுவான இருப்பு உள்ளது. தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, வட மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் காலடி வைக்க முயற்சி செய்கிறோம். பசுமை உற்பத்தி திட்டங்களுக்கு, எந்த அளவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது?
இந்நிறுவனம், 50 சதவீதம் அளவுக்கு பசுமை ஆற்றலில் இயங்கி வருகிறது. மொத்த உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் 40 சதவீதம், மறுசுழற்சி மற்றும் மழை நீர் வாயிலாக கிடைக்கிறது. பவுண்டரி பிரிவில் வெளியேறும் கழிவு மணல், செங்கலாக மாற்றப்படுகிறது. அடுத்த இரு ஆண்டுகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டை 40 சதவீதமாக குறைக்க திட்டம் உள்ளது. வாசுதேவன், பிரேக்ஸ் இந்தியா, பிரேக் வணிக பிரிவின் தலைவர்