உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / அம்பாசிடருக்கு இன்னும் இருக்கு ரசிகர் பட்டாளம்!

அம்பாசிடருக்கு இன்னும் இருக்கு ரசிகர் பட்டாளம்!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான, 'துடரும்' என்ற படத்தை பார்த்தவர்கள், அதில் முக்கிய 'கதாபாத்திரமாக' வரும் அம்பாசிடர் காரை மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு, இந்திய சாலைகளை ஒரு காலத்தில் ஆண்ட, ஏகபோக சக்ரவர்த்தி இந்த கார். மோரிஸ் மோட்டார்ஸ் உருவாக்கிய, ஆக்ஸ்போர்டு சீரிஸ் 3 மாடலை அடிப்படையாகக் கொண்டு, சற்று மாறுதலுடன் உருவாக்கப்பட்டது அம்பாசிடர். மூன்று பெட்டி கட்டமைப்பு, கிளாசிக் ரெட்ரோ மாடல், கண் போன்ற முகப்பு விளக்குகள் முன்பக்கத்தில் இன்ஜின், பின்பக்கம் தனி பெட்டி என, செடான் மாடலாக உருவானது. மெட்டல் பாடியில், பல்வேறு வண்ணங்கள் இருந்தாலும் வெள்ளை நிறம் தனி ஆதிக்கம் செலுத்தியது. உற்பத்தி நிறுத்தம் இந்தக் காருக்கு என, தனி ரசிகர் பட்டாளமே இருந்தது; இன்னும் இருக்கிறது. சாமானியர்களின் டாக்ஸி பயணத்தில் இருந்து, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரின் ரதம் இதுதான். இது வெறும் காராக இல்லாமல், இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் அடையாளமாகவே மாறிப்போயிருந்தது. காலப்போக்கில் மற்ற நிறுவனங்களின் வருகையில், ஓரம் கட்டப்பட்டு, 2014 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனாலும், இன்னும் பலர் அம்பாசிடரை பராமரித்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான், இக்காருக்கான மெக்கானிக்குகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான புருசோத்தமனை சந்தித்தோம். கிக்கானி பள்ளி எதிரில், மணி ஆட்டோமொபைலில் மும்முரமாக ஒரு 'வெண்ணிற தூதனை' கவனமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார். ''23 வருசமா அம்பாசிடரை ரெடி பண்ணிக் கொடுத்துட்டு இருக்கேன். மாமா மணிதான் 51 வருசமா பாத்துக்கிட்டு இருந்தாங்க. நிறைய வண்டிங்க இருந்தாலும், அம்பாசிடர் தர்ற அந்த உணர்வ வேற எதாலயும் தர முடியாது. எவ்வளவு தூரம் போனாலும், சோபால உக்காந்த மாதிரியே இருக்கும். அலுப்பே இருக்காது. குறிப்பிட்ட தூரம் போனா, மிதக்கற மாதிரி ஓடும். எந்த ரோடா இருந்தாலும் கவலை இல்லாம போலாம். ரொம்ப பாதுகாப்பான வண்டியும் கூட. அதிகம் செலவு வைக்காது. மத்த கார்கள்ல வேலை பாத்தா, 1, 2 நாள்ல வேலையை முடிச்சு உடனே காசு பாக்கலாம். ஆனா, இதுல மாசக்கணக்குல வேல பாக்கணும்,'' ''இப்ப, இத வேல பாக்குறதுக்கு, கோயமுத்தூர்ல ரெண்டு, மூணு பேர்தான் இருக்கோம். டிங்கரிங் செய்ய தெரிஞ்சவங்களே இல்ல. எங்ககிட்ட இருக்கற 2 பேருமே, 60 வயசுக்கு மேல ஆனவங்கதான். ஸ்பேர் கூட அவ்வளவா கிடைக்கறதில்ல. தாத்தா காலத்துல இருந்து வச்சுருந்திருப்பாங்க. பழச வாங்கி வேல செஞ்சு ஓட்டறவங்க இருக்காங்க. எத்தனை மாசம் ஆனாலும் பரவாயில்லை. ரெடி பண்ணிக் குடுங்கனு வந்து நிப்பாங்க. அவங்களோட அந்த பிரியத்துக்காகவே, ரெடி பண்ணிக் குடுக்கறேன்,'' ''அம்பாசிடர் வண்டி பழுதுபார்க்க நிறைய வருதா,'' ''இப்ப 5 வண்டி வந்துருக்கு.(ஒரு காரைக் காட்டி) இதோ இதெல்லாம் ஒரு வருசமா நிக்குது. கொஞ்சம் கொஞ்சமா வேல பாத்துட்டு இருக்கேன். மத்த கார்கள ரெடி பண்றது, என்னோட வருமானத்துக்காக. இத ரெடி பண்றது என்னோட திருப்திக்காக. எந்த ஹையர் எண்ட் மாடலா இருந்தாலும், இதோட சொகுசு வராது. என்ன இருந்தாலும் ராஜா ராஜாதானே,'' ''வாஸ்தவம்தான் நீங்க சொல்றது,'' என ஆமோதித்து விடைபெற்றோம். ''தாத்தா காலத்துல இருந்து வச்சுருந்திருப்பாங்க. பழச வாங்கி வேல செஞ்சு ஓட்டறவங்க இருக்காங்க. எத்தனை மாசம் ஆனாலும் பரவாயில்லை. ரெடி பண்ணிக் குடுங்கனு வந்து நிப்பாங்க. அவங்களோட அந்த பிரியத்துக்காகவே, ரெடி பண்ணிக் குடுக்கறேன்,''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி