உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டடங்களுக்கு பசுமை பெயின்டை தேர்வு செய்வது எப்படி?

கட்டடங்களுக்கு பசுமை பெயின்டை தேர்வு செய்வது எப்படி?

புதிய கட்டடங்களுக்கு கம்பிகள், கான்கிரீட் உள்ளிட்ட பொருட்கள் போன்று, பெயின்ட் தேர்வு செய்வதிலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக கட்டடங்களுக்கான பெயின்ட் என்பது ரசாயனங்களை அடிப்படையாக வைத்து தான் தயாரிக்கப்படுகிறது என்ற எண்ணம் உள்ளது. இதனால், கான்கிரீட் கட்டுமான பணியின் போது இருந்ததைவிட, பெயின்ட் அடிக்கும் பணியின் போது, சம்பந்தப்பட்ட பகுதிக்குள் செல்வது பலருக்கும் சிரமமாக இருக்கும். பெயின்ட் அடிக்கும் போது எழும் ரசாயன வாடை அங்கு செல்வோருக்கு சில சமயங்களில் உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்திவிடும். என்ன தான் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்டு இருந்தாலும், வெளிப்புற தோற்றத்தில் பளபளப்பு, அழகு கொடுக்கும் வண்ணங்களை தேர்வு செய்வதில் மக்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. இந்நிலையில் கட்டடங்களுக்கான பெயின்ட்களை தேர்வு செய்வதற்கு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பொதுவாக பெயின்ட் என்றால் அது காரீயம் அடிப்படையிலான ரசாயன கலவை என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது. பெயின்ட்டை சுவருடன் நன்றாக ஒட்ட வைக்க வேண்டும், மிடுக்காக வண்ணம் தெரிய வேண்டும் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய அதில் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் காரீயம் போன்ற உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரசாயனங்களை தவிர்த்து மாற்று வழிகளுக்கான தேடல் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு திருப்புமுனையாக, ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி, பெயின்ட் தயாரிப்பில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, மாட்டு சானத்தில் இருந்து சில கூறுகளை எடுத்து, அதை அடிப்படை பொருளாக வைத்து பெயின்ட் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ரசாயனங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் பெயின்ட்களில் இருப்பது போன்ற பாக்டீரியா எதிர்ப்பு, நல்ல ஒட்டும் திறன், வெளிப்புற தோற்றத்தில் பளபளப்பு ஆகிய விஷயங்கள் இதில் காணப்படுகின்றன. குறிப்பாக, காரீய அடிப்படையிலான பெயின்ட்கள் போன்று இதில் ரசாயன நெடி இருக்காது என்பதால், பசுமை கட்டுமான பொருளாக இது அமைந்துள்ளது. கட்டடத்தின் உட்புறம், வெளிப்புறம் என அனைத்து இடங்களிலும் மாட்டு சானம் அடிப்படையில் தயாரிக்கப்படும் பெயின்ட்களை பயன்படுத்தலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள் இதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் பி.ஐ.எஸ்., போன்ற தரச்சான்று பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்னும், பல்வேறு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டால் ரசாயன வாடை இல்லாத பெயின்ட்களை எளிதாக பயன்படுத்தும் சூழல் விரைவில் உருவாகும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை