அலுவலகத்துக்கு அலையாமல் கட்டட அனுமதி வரைபடங்களை சரி பார்க்கவும் கூடுதல் வசதி
எளிதாக கட்டட தொழில்புரியும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று ஒற்றை சாளர முறையில் இணையம் வாயிலாக திட்ட, கட்டட அனுமதிகளை வழங்குவதாகும். எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்ல தேவையில்லாத வகையில், முழுமையாக இணையவழி சேவை வழங்குவதே திட்டம். ஆனாலும் நேரில் செல்லாமல் பணிகள் இன்னும் முடிவதில்லை. இதற்கு விலக்காக, சுய சான்றிடப்பட்ட கட்டடஅனுமதியானது, பதிவுபெற்ற பொறியாளர் வாயிலாக பெறும்போது அரசின் திட்டம் முழுமை அடையும் என்கிறார், பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம். அவர் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து நில அபிவிருத்தி திட்டங்களுக்கும், நில பயன்பாடு மாற்றம் மற்றும் முடிவுறு சான்று பெறுவதற்கும், ஒற்றை சாளர முறையில் இணைய வழியாக உள்ளாட்சிக்கும், திட்டமிடும் அதிகார அமைப்பான டி.டி.சி.பி., மற்றும் எல்.பி. ஏ.,க்கு விண்ணப்பிக்க https://onlineppa.tn.gov.in/SWP-web/login எனும் தளத்தை அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வாயிலாக அறிவித்துள்ளது . இது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். இனிமேல் இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும், நேரில் விண்ணப்பங்கள் பெறக்கூடாது எனவும், அரசுத்துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இணையதளம் அனைத்து உள்ளாட்சிகளை மட்டுமில்லாமல் தடையின்மை சான்று(என்.ஓ.சி.,) வழங்கும் துறைகளையும் ஒருங்கிணைக்கிறது. குடியிருப்புக்கு, 3,500 சதுரடி மற்றும் 5,000 சதுரடி தொழிற்சாலை கட்டடங்களுக்கு சுய சான்றிடப்பட்ட கட்டட அனுமதி பெறும் வகையிலும் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடம், லே-அவுட் வரைபடங்களை மின்னணு வாயிலாக சரி பார்க்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிலையை தெரிந்துகொள்ள, எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கும், பொறியாளர்களுக்கும் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்டணங்களையும், இணைய வழியாகவே செலுத்தலாம். இறுதியில் மின்னணு கையெழுத்துடன் வரைபடம் வழங்கப்படுகிறது. ஒரு பிரதி, ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் அனுப்பப்படுகிறது. கட்டட உரிமையாளர் கட்டுமானம் ஆரம்பிப்பதையும், முடித்துவிட்டதையும் இணைய வழியாக அரசு துறைக்கு தெரிவிக்கலாம். எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்ல தேவையில்லாத வகையில் அரசு வழங்கியுள்ள இந்த இணைய வழி சேவையை, அனைவரும் பயன்படுத்தலாம். இவ்வாறு, அவர் கூறினார்.