உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / 2,000 சதுரடி கூடுதல் கட்டுமானத்துக்கு தனி மின் இணைப்பு அவசியமில்லை

2,000 சதுரடி கூடுதல் கட்டுமானத்துக்கு தனி மின் இணைப்பு அவசியமில்லை

குடியிருப்பு, வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இது, 240 வோல்ட் மின்னழுத்தம் மற்றும், 50 ஹெர்ட்ஸ் அலை அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டமாகும். நம் நாட்டில் பயன்படுத்தப்படும், அனைத்து வீட்டு உபகரணங்களும் இந்த மின்சாரத்திலேயே இயங்குகின்றன.மின் தேவையை பூர்த்தி செய்ய சோலார் பலகைகள், மின் காற்றாலை, ஜெனரேட்டர் அல்லது அரசின் மின் வினியோகத்தை பயன்படுத்தலாம். இவற்றில் பெரும்பான்மையானோர் அரசின் மின் வினியோகத்தையே பெறுகின்றனர். இது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு((TNERC 23-24) உட்பட்டே வினியோகிக்கப்படுகிறது.கட்டட பயன்பாட்டின் அடிப்படையில், ஆணையம் பல வகை கட்டணங்களை விதிக்கின்றன. உதாரணமாக, தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், முதியோர் இல்லம் ஆகியவற்றுக்கு கட்டணம், 1-A வீதமும், வணிக கட்டடங்களுக்கு, V வீதமும் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், 2,000 சதுரடி வரையிலான கூடுதல் கட்டுமானத்திற்கு தனி இணைப்பு பெற வேண்டியதில்லை என்கிறார், பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.அவர் மேலும் கூறியதாவது:தற்போதைய குடியிருப்பில் கட்டப்படும், 2,000 சதுர அடிக்கு மிகாமல் உள்ள கூடுதல் கட்டுமானத்திற்கு தற்போதுள்ள மின் இணைப்பையே பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டணம் 1-A கொண்ட குடியிருப்பு இணைப்புக்கு மட்டுமே இது பொருந்தும்.குறைந்த அழுத்த மின் கட்டணம் வீதம் V இதர பொது தேவைகளுக்கு பொருந்தும்; வணிக கட்டடங்கள் என இது அறியப்படும். மால்கள், சூப்பர் மார்க்கெட், சினிமா தியேட்டர், ஹோட்டல், தனியார் மருத்துவமனை போன்றவற்றுக்கு, இந்த கட்டணம் பொருந்தும்.பல குடியிருப்புக்கள் உள்ள இடத்தில், அவைகளுக்கான பொது வசதிகளான வெளிச்சம், நீர் வினியோகம், மின் துாக்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, நீர் சுத்திகரிப்பு ஆலை, தீ தடுப்பான் வசதி, திறந்தவெளி அரங்கம் போன்றவற்றுக்கு தனியான இணைப்பு மூலம் கட்டண வீதம் I-Dன் படி வசூலிக்கப்படும்.ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வணிகம் அல்லது பிற தேவைக்கு பயன்படுத்தும் குடியிருப்புகளின் பரப்பு, 25 சதவீதத்திற்கு கூடுதலாக இருந்தால், பொது தேவைகளுக்கான பொது விளக்கு, நீர் வினியோகம், மின் துாக்கி மற்றும் பிற வசதிகளுக்கு, I-V கட்டணம் வசூலிக்கப்படும்.மின் பயன்பாட்டு கட்டணம் தவிர, நிலையான கட்டணமும் I-D, V வகைகளில் வசூலிக்கப்படும். கட்டுமானத்திற்கான மின் தேவைக்காக, தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும். இதற்கு கட்டண வீதம் VI பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை