தின கூலி ஒப்பந்த முறையில் கட்டுமான பணிகள் தாமதமாவது ஏன்?
வீட்டுக்கான கட்டுமான பணிகளை யாரிடம், எந்த அடிப்படையில், எப்படி ஒப்படைப்பது என்பதில் பலருக்கும், குழப்பம் இருக்கலாம். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிகளை மொத்தமாக தொகை பேசி ஒரு ஒப்பந்ததாரரிடம் விடுவது தான் நல்லது என்று கூறப்படுகிறது. இதில் புதிய வீட்டை கட்டுவதாக இருந்தாலும், பழைய வீட்டை புதுப்பிப்பதாக இருந்தாலும் ஒப்பந்த முறையில் பணிகளை ஒப்படைப்பது தான் நல்லது. இதற்கான ஒப்பந்தம் வாய்மொழியாக மட்டும் இல்லாமல், எழுத்துப்பூர்வமாக இருப்பது சட்ட ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் வீடு கட்டும் பணிகளை ஏற்கும் போது, பொருட்கள் வாங்குவது, பணியாளர்களை அமர்த்துதல் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து தான் ஒப்பந்தம் போடுகின்றனர்.இதில் கட்டுமான பொருட்களை உரிமையாளர் வாங்கித்தர முன்வந்தால் அதை பலரும் ஏற்பதில்லை. இதில் வேறு வழியின்றி, கட்டுமான பொருட்களை உரிமையாளர்கள் வாங்கி கொடுப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தால் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்படுகிறது. பணி நாட்களை அதிகரித்து, ஊதிய வகையில் குறிப்பிட்ட தொகையை லாபமாக பார்க்க ஒப்பந்ததாரர்கள் முயற்சிக்கின்றனர். புதிய கட்டடத்தின் கட்டுமான பணி என்றாலும், பழைய கட்டட புதுப்பித்தல் பணி என்றாலும் அதில் பணிகளை எப்போது முடிக்க வேண்டும் என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இதில் கட்டுமான பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுவது ஏன் என்பது பலருக்கும் புதிராக இருக்கும். பொதுவாக, கட்டுமான பொருட்களை வாங்குவதில் ஒப்பந்ததாரர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் ஒரு ரகசிய உடன்பாடு இருக்கும். இதனால், ஒப்பந்ததாரர் கேட்கும் நேரத்தில், வேண்டிய அளவில் கட்டுமான பொருட்கள் உடனுக்குடன் சப்ளை செய்யப்படும். இது விஷயத்தில் பெரும்பாலான டீலர்கள், கட்டுமான பொருட்களை ஒப்பந்ததாரர் வாயிலாக விற்பனை செய்வதிலேயே ஆர்வமாக இருப்பதும் இதில் மிக முக்கிய காரணமாகும். பிரபலமான சிமென்ட், பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள், முறையாக பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் வாயிலாக விற்பனை மேற்கொள்வதை விரும்புகின்றனர். இதில், தனி நபர்களை காட்டிலும், ஒப்பந்ததாரர்கள் மிக முக்கிய வாடிக்கையாளர்களாக கருதப்படுகின்றனர்.இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட பொருளை தனி நபர் வாங்குவதற்கும், ஒப்பந்ததாரர் வாங்குவதற்கும் விலை சற்று குறைந்து காணப்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் பொருட்கள் வாங்குவதுடன் சேர்த்து தான் பணிகளை ஏற்கும் நிலைக்கு முன்வருகின்றனர்.இதை சரியாக புரிந்து கொண்டால் வீடு கட்டும் பணிகளை தாமதம் இன்றி முடிக்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.