உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் /  படுக்கை அறையை வடிவமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 படுக்கை அறையை வடிவமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தற்போதைய சூழலில், பெரும்பாலான வீடுகளில் படுக்கை அறை எங்கு அமைய வேண்டும் என்பதற்கான அடிப்படை புரிதல் இருப்பதில்லை. புதிய வீட்டுக்கான வடிவமைப்பை திட்டமிடும் போது, வரவேற்பு அறையின் அமைப்பு, அளவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதே அளவுக்கு, சமையலறை, படுக்கை அறை ஆகியவற்றுக்கும் உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, படுக்கை அறையில் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் எவ்வித தவறும் இல்லை. உங்களுக்கான வீட்டில் படுக்கை அறையின் அளவுகள், அமைவிடம் மட்டுமல்லாது அதன் சுவர்களின் அமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இடப்பற்றாக்குறை காரணமாக, ஒரு சுவரின் ஒரு பக்கம் சமையலறையின் மேடை இருக்கும், மறு பக்கம் படுக்கை அறையில் கட்டில் அமைக்கப்பட்டு இருக்கும். மேலோட்டமாக பார்த்தால் இரண்டும் வெவ்வேறு அறைகள் தானே, இவ்வாறு படுக்கை அறை அமைந்தால் என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று நினைக்கத்தோன்றும். உண்மையில், படுக்கையில் நிம்மதியாக துாங்கலாம் என்று நீங்கள் நினைக்கும் சமயத்தில் சமையலறையில் இருந்து சுவர்கள் வழியே சத்தம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான வீடுகளில் இரவில் மட்டுமல்லாது அதிகாலையிலும் சமையல் வேலை நடக்க வாய்ப்புள்ளது. இது போன்ற சமயத்தில் சமையலறையில் இருந்து வரும் சத்தம், அதிர்வுகள் போன்றவை படுக்கை அறையில் இருப்பவரின் துாக்கத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. சரி, சமையலறையை ஒட்டிய சுவர் பக்கம் வேண்டாம், எதிர் திசையில் ஜன்னலை ஒட்டி கட்டில் அமைக்கலாம் என்று சிலர் நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஜன்னலை ஒட்டி படுக்கையை அமைப்பதில் பாதுகாப்பு ரீதியாக பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே நேரம், ஜன்னலுக்கு வெளியில் மக்கள் நடமாட்டம் போன்ற காரணங்களால் ஏற்படும் சத்தம் துாக்கத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஜன்னலை ஒட்டியும் படுக்கையை அமைக்காமல் தவிர்த்தால் வேறு எந்த பக்கம் தான் படுக்கையை அமைப்பது என்ற கேள்வி எழும். இதில் படுக்கை அறையில், சமையலறை அல்லது வரவேற்பு அறையின் சுவர் வரும் நிலையில் அங்கு அலமாரி அமைத்துவிட்டு, அதற்கு எதிர் திசையில் படுக்கை அமைப்பது நல்லது என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள். ஒ ரு வீட்டை கட்டும் போது அதில் படுக்கை அறை என்பது மிகவும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு பெயரளவுக்கு நினைத்தால் மட்டும் போதாது, கட்டடத்தின் வடிவமைப்பில் அதற்கான வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். படுக்கையை அறையை வடிவமைக்கும் போது, எந்த இடத்தில் கட்டில் அமைய வேண்டும் என்பதில், குறிப்பாக, சமையலறை சுவரை ஒட்டியும், ஜன்னலை ஒட்டியும் கட்டில் அமைய கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ