மூங்கில் தரும் நீண்ட கால தாங்கும் திறன் ஸ்டீலுக்கு மாற்றான உறுதி என நம்பிக்கை
'மரம் மற்றும் ஸ்டீலுக்கு மாற்றாக, உறுதியையும், நீண்டகால தாங்கு திறனையும் மூங்கில்களாலும் அளிக்க இயலும்,'' என்கிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் பொறியாளர் ரவிச்சந்திரன்.அவர் கூறியதாவது:நன்கு வளர்ந்த மூங்கிலை கொண்டு தளம், ப்ளைவுட், அறைகலன்கள் மற்றும் லேமினேட்களை அமைக்க முடியும். சூழலை மாசுபடுத்தாத, பாதுகாப்பான கட்டுமானப் பொருளாகவும், மூங்கில் இருக்கிறது.ஒரு வீட்டின் செலவில், 40 சதவீதத்தை மூங்கில் பொருட்களை பயன்படுத்துவதன் வாயிலாக குறைத்துவிட முடியும். அத்துடன், வீட்டின் ஆரோக்கியச் சூழலும் மூங்கில் பொருட்களால் மேம்படும்.மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில், இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில், வீடுகளைப் பாதுகாப்பாகக் கட்டுவதற்கு, மூங்கில் சிறந்த கட்டுமானப் பொருளாக இருக்கிறது. ஏனெனில் நில அதிர்வு விபத்துகளில், மூங்கில் லேசாக இருப்பதால் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதே வேளையில், மூங்கிலின் தசைநார்கள் இரும்பை விட வலிமையானவை.இரும்புக் கம்பிகளால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட்டுக்கு மாற்றாக, தற்போது மூங்கில்களால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட், பல நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுவர்கள், துாண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும், விசிறி பிளேடுகளைக் கூட மூங்கிலில் செய்கின்றனர். தற்போதும் கூட, பெங்களூருவுக்கு அருகேயுள்ள தேவனஹள்ளியில், நுாற்றுக்கணக்கான வீடுகள், மூங்கில் பொருட்களால் கட்டப்பட்டு, 75 ஆண்டுகளுக்குப் பிறகும், அருமையாக தாக்குப்பிடிக்கின்றன.ஒரு மூங்கில் செடி, கட்டுமானத் தரத்திலான மூங்கிலைத் தருவதற்கு, நான்கு வருடங்களில் தயாராகிவிடும். மூங்கிலைப் பயன்படுத்த நாம் தயாராக வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.