நகர திட்டமிடல், வடிவமைப்புக்கு டிரோன் சர்வே எப்படி உதவுகிறது?
நி ல அளவை என்பது நிலத்தின் அளவு, எல்லை, உயரம், சாய்வு மற்றும் திசை ஆகியவற்றை மிகத் துல்லியமாக கணக் கிடும் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறை. இது வீட்டிலிருந்து பெரிய தொழிற்சாலை வரை, எல்லா கட்டுமானங்களிலும் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் செய்ய அடிப்படை. நில அளவை செய்ய, 'டோட்டல் ஸ்டேஷன்' எனும் கருவி பயன்படுகிறது. துாரம், உயரம், கோணம் போன்றவற்றை இக்கருவி மிகத்துல்லியமாக கணக்கிடுகிறது. கட்டட வரைபடம், எல்லை குறிப்பு, அங்கீகாரம் பெறும் வரைபடங்கள் போன்ற பணிகளில் முக்கியமாக பயன்படுகிறது. 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் கூறிய தாவது: டி.ஜி.பி.எஸ்., (டிப்ரன்சியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) செயற்கைக்கோளின் வாயிலாக நிலத்தின் அச்சுக்கோட்டுகளை சரியாக அறிந்து, பெரிய நிலப்பரப்புகளில் அளவீட்டு பணிகள் மற்றும் லே-அவுட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 'டிரோன் சர்வே' என்பது, வானில் பறக்கும் டிரோன் வாயிலாக படங்கள் மற்றும் வீடியோ எடுத்து கணினியில் 3டி மாடல் மற்றும் வரைபடம் உருவாக்கப்படுகிறது. கட்டுமானம் தொடங்குவதற்கு முன், டோட்டல் ஸ்டேஷன் வாயிலாக நிலத்தின் எல்லைகள் மற்றும் பரப்பு துல்லியமாக அளவிடப்படுகிறது. நிலச்சரிவு, வடிகால் திசை, அடித்தளம் அமைப்பிடம் போன்றவற்றை அளவீட்டில் தெரிந்து கொள்ளலாம். சிறிய நிலப்பரப்புகளிலும் டிரோன் சர்வே வாயிலாக முழு பகுதியின் 3டி வரைபடம் தயாரித்து, கட்டட வடிவமைப்பை எளிதாக்கலாம். இதனால், சட்டபூர்வ பிரச்னைகள் தவிர்க்கப்பட்டு, அங்கீகாரம் பெறும் வரைபடம் சரியாக தயாரிக்க முடிகிறது. டி.ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக பெரிய வணிக வளாகங்கள் மற்றும் பல மாடி கட்டடங்களின் நில எல்லை, மையப் புள்ளிகள் சரியாக நிர்ணயிக்கப் படுகின்றன. டிரோன் சர்வே வாயிலாக, மேலிருந்து எடுக்கப்படும் விமானக் காட்சிகள் நகர திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் உதவுகின்றன. இதனால் அரசு அங்கீகாரம், பாதுகாப்பு தரநிலை, வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவை எளிதில் கிடைக்கின்றன. டோட்டல் ஸ்டேஷன் வாயிலாக சாலை, மின் கேபிள் பாதைகள் போன்றவற்றின் துாரங்கள் சரியாக கணக்கிடப்படுகின்றன. நில அளவை வாயிலாக சட்ட ரீதியான நில எல்லைகள் உறுதி செய்யப்படுகிறது. இதனால், திட்டத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மை உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.