உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / கிராமங்களில் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி பெறும் வழிமுறைகள்

கிராமங்களில் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி பெறும் வழிமுறைகள்

கிராமப்புறங்களில் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து அனுமதி பெறுவது தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. டி.டி.சி.பி., அனுமதி இல்லாமல் இதை செய்ய முடியாது. இச்சூழலில், இதுகுறித்த ஆலோசனைகளும், சந்தேகங்களும் பொறியாளர்களிடம் அதிகம் கேட்கப்படுகின்றன.இதற்கான முக்கிய வழிமுறைகள், அவற்றின் அடிப்படைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விளக்குகிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் (காட்சியா) சங்க உறுப்பினர் சரவணகுமார். அவர் கூறியதாவது:ஒரு ஏக்கர் நிலத்தில், 10 சதவீதம் பகுதியை பூங்காவுக்கும், மேலும் மின்வாரியம் மற்றும் பொது பயன்பாட்டிற்கு தலா, 0.5 சதவீதம் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மனைப்பிரிவுக்குள் குறைந்தது, 30 அடி அகலத்தில் தரமான தார் சாலை அமைக்க வேண்டும்.குறுக்கு சாலைகள், 23 அடி இடைவெளி உள்ளதாக இருக்க வேண்டும். மனையாக மாற்ற விரும்பும் நிலம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு அருகே இருக்கக் கூடாது. ரயில்வே தண்டவாளம், மயானம் போன்ற இடங்கள் அருகாமையில் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.மேலும், விவசாய நிலமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை குடியிருப்பு பகுதிக்குரிய நிலமாகவோ, ஒரு கம்பெனி கட்டுகிறீர்கள் என்றால் அதை வர்த்தகம் அல்லது வணிக பகுதிக்கு உரிய நிலமாகவோ டி.டி.சி.பி., மூலமாக அனுமதி வாங்கி அதை மாற்றிக் கொள்ளலாம். நிலத்தின் தற்போதைய ஆவணம்(விற்பனை பத்திரம்), ஆதார ஆவணம், வில்லங்க சான்று, சட்ட அபிப்ராயம், பட்டா, சாலை அணுகுமுறை சான்று, அடங்கள், நில உரிமைச் சான்று, கிராம வரைபடம் மற்றும் டி.டி.சி.பி., வரைபடம் உள்ளிட்டவை மனை பிரிப்பதற்கான முக்கிய ஆவணங்கள்.நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல்(கிரையம்), ஒரு நிலம் இன்னார் பெயரில் இருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறை அளிக்கும் சான்றிதழ் (பட்டா) முக்கியம்.குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் நிலம் உள்ளது என்பது தொடர்பான வருவாய்த்துறை ஆவணம்(சிட்டா), நிலத்தின் பரப்பு பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் எந்த பகுதியில் உள்ளது என்பது தொடர்பான ஆவணமும் அவசியம்.ஒரு நிலத்தின் உரிமையாளர்கள், அதை எவ்வாறு வாங்கினார்கள், எவ்வாறு அந்த நிலத்தை அனுபவிக்கிறார்கள் போன்றவற்றை அலசும் பதிவுத்துறை ஆவணம்(வில்லங்க சான்று) ஆகியவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனுபவமுள்ள பொறியாளரை நியமித்து, டி.டி.சி.பி., விதிமுறைகளின் அடிப்படையில் திட்ட வரை படம் தயாரித்து அனுமதி பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி