உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / வீட்டில் கதவு, ஜன்னல்கள் அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீட்டில் கதவு, ஜன்னல்கள் அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

புதிதாக கட்டும் வீட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் என்ன பொருளை பயன்படுத்த வேண்டும் என்று துல்லியமாக திட்டமிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு பாகத்துக்கான பொருட்கள் குறித்து மக்கள் கவனம் செலுத்துவது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் இதில் எந்த அடிப்படையில் மக்கள் செயல்படுகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வீட்டில் உள் அலங்காரம், தரைகளுக்கான பதிகற்கள், சுவர்களுக்கான வண்ணம், கதவு, ஜன்னல் போன்ற விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். மேலோட்டமாக பார்த்தால் இது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக தெரிந்தாலும், மக்கள் இதில் என்ன விஷயத்தை ஆழமாக பார்க்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, வீட்டுக்கான பதிகற்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டும் மக்கள் அதன் வடிவமைப்பு, தோற்றம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், உண்மையில் உங்கள் வீட்டுக்கு வாங்கப்படும் பதிகற்களின் தரம், தடிமன், விலை, பராமரிப்பு தொடர்பான விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதே போன்று, வீட்டில், கதவு, ஜன்னல் போன்ற பொருட்களை வாங்குவதிலும் மக்கள் தவறுகள் செய்கின்றனர். பொதுவாக வீட்டில் எந்தெந்த இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும் என்பதை வரைபட தயாரிப்பு நிலையிலேயே முடிவு செய்வது நல்லது. அதில் எந்த இடத்தில் என்பதுடன் அதன் அளவுகள் சார்ந்த விஷயங்களையும் மக்கள் கவனமாக பார்க்க வேண்டும்.குறிப்பாக, வீட்டுக்கு பிரதான வாயில் எந்த திசையில் இருக்க வேண்டும், என்ன வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்று பார்ப்பதுடன், அதன் அளவுகள் தொடர்பாகவும் பார்க்க வேண்டும். இதில் பெரும்பாலான மக்களுக்கு போதிய புரிதல், விழிப்புணர்வு இல்லாததே குறைபாடாக தெரிகிறது. உங்கள் வீட்டுக்கான கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கான பொருட்களை வாங்கும் நிலையில், அது மரத்தில் அமைய வேண்டுமா அல்லது பிற வகை பொருட்களால் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டுமா என்று பாருங்கள். கதவுகளை பொறுத்தவரை எந்த இடத்துக்கு எத்தகைய கதவு ஏற்றதாக இருக்கும் என்று பாருங்கள்.குறிப்பாக, எந்த மரத்தால் ஆன கதவு நன்றாக இருக்கும் என்பதுடன் அதில் எது நம் பட்ஜெட்டுக்கும், தேவைக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். இதில் பெரும்பாலன மக்கள் வெளித்தோற்றம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதால் தரம் சார்ந்த தகவல்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. உண்மையில், வீட்டுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பொருளும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அது தரமானதாகவும், நீண்டகாலம் உழைக்க கூடியதாகவும், நம் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !