ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறதே
இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக குறைந்தால், அது இதயத்தை பலவழிகளில் பாதிக்கிறது. உங்கள் டாக்டரை சந்தித்து, உடனடியாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும்* என் சகோதரருக்கு, 'பைபாஸ் சர்ஜரி' செய்து, இரு ஆண்டுகளாகின்றன; நலமாக உள்ளார். தற்போது மீண்டும் புகைப் பழக்கத்தை துவக்கி விட்டார். இதனால் பாதிப்பு வருமா?பைபாஸ் சர்ஜரி என்பது, இதய ரத்தநாளத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து, இதயத்தில் பொருத்தும், அறுவை சிகிச்சை ஆகும். பைபாஸ் சர்ஜரி செய்தவருக்கு, புதிதாக பொருத்தப்பட்ட ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்படவும், பழையை அடைப்பு மீண்டும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 'பைபாஸ் சர்ஜரி' செய்தவர்கள், சரியான உணவுப் பழக்கம், தினமும் நடைபயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுதல், நேரத்துக்கு தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வது அவசியமாகும். புகைப் பழக்கத்தை மறுபடி துவக்கினால், மீண்டும் ரத்தநாளத்தில் அடைப்பு, அதனால் மாரடைப்பு வரும் தன்மை, பல மடங்கு அதிகரித்து விடும். புகைப் பழக்கம் இதய நோயின் முதல் எதிரி. அதை அறவே நிறுத்துவது, இதய ஆரோக்கியத்திற்கு, ஒருவர் எடுக்கும் முதற்படி சிகிச்சை ஆகும்.* எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இரு வகை மருந்துகளை எடுக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பின், அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90 மி.கி., 80 மி.கி., என, குறைந்து விடுகிறது. நான் என்ன செய்வது?இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளி களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக குறைந்தால், அது இதயத்தை பலவழிகளில் பாதிக்கிறது. உங்கள் டாக்டரை சந்தித்து, உடனடியாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில், 130 மி.கி., என்ற அளவிலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, 180 மி.கி., என்ற அளவிலும் இருப்பது நல்லது. HbA1c என்ற அளவு, 7.0 என்ற அளவில் இருந்தால் போதுமானது. நீங்கள் எடுக்கும் மருந்தின் அளவை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.* என் வயது, 42, தினமும் நடைபயிற்சி செய்து வருகிறேன். தினமும் எவ்வளவு நேரம் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?உடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நடை பயிற்சி போன்ற சிறந்த ஒரு பயிற்சி வேறு எதுவும் இல்லை. தினமும் நடை பயிற்சி செய்தால், பல வழிகளில் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. சில வகை புற்றுநோய்களும் நடை பயிற்சியால் தடுக்கப்படுகிறது என, தெரிய வந்துள்ளது. உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கவும், மனதை நல்லெண்ணத்துடன் ஆரோக்கியமானதாக வைக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் தினமும், 45 நிமிடங்கள், வாரம் 5 நாட்களாவது நடந்தாக வேண்டும். இருப்பினும், தினமும் ஒரு மணி நேரம், வாரத்தின் எல்லா நாட்களும் நடப்பது சிறந்தது.டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.