அதிகரிக்கிறது கர்ப்பப்பைவாய் அல்சர் அலட்சியமாக இருந்தால் வரலாம் கேன்சர்
கோவை: இன்றைய இளம் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் பகுதியில் புண் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால், பெண்கள் அலட்சியம் காட்டாமல், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு, மகளிர்நலத்துறை தலைவர் டாக்டர் கீதா அறிவுறுத்தியுள்ளார். கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படும் தொற்று காரணமாக அல்சர் உருவாகிறது. இது, கணவருக்கு ஏதேனும் தொற்று இருந்தாலோ அல்லது பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட்டாலோ உருவாகலாம். முன்பு 35- 50 வயதுக்குட்பட்டோருக்கே, இப்பாதிப்பு இருந்தது. இப்போது 30 வயதை ஒட்டிய இளம் பெண்களும், சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது. அறிகுறிகள் இதுதான்!அதிகமாக வெள்ளைப்படுதல், துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுவது, அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது லேசான எரிச்சல் ஏற்படுவது, மாதவிடாய் இல்லாத நாட்களிலும் உதிரப்போக்கு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் புண்கள் இருக்கலாம். இது சாதாரண தொற்றா அல்லது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியா என்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியம். 'பாப் ஸ்மியர்' பரிசோதனை மூலம், இதை உறுதிப்படுத்தலாம். தேவைப்பட்டால் 'கால்போஸ்கோபி' மற்றும் 'பயாப்ஸி' சோதனைகளும் செய்யப்படும். பரிசோதனையில் சாதாரண புண் மட்டுமே என்பது உறுதியானால், ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலமே, முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிகமாக வெள்ளைப்படுதல், துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுவது, அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது லேசான எரிச்சல் ஏற்படுவது, மாதவிடாய் இல்லாத நாட்களிலும் உதிரப்போக்கு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் புண்கள் இருக்கலாம்.'தடுப்பூசியே சிறந்த பாதுகாப்பு'கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க, எச்.பி.வி., தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகச்சிறந்த தீர்வாகும். தற்போது 14 வயது மாணவிகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், இத்தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 3 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இது போட்டுக் கொண்டாலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'பாப் ஸ்மியர்' பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது.