புற்றுநோய்க்கு மாம்பழம் மருந்து
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை, விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. அதன் பொன்னிற தோற்றமும், தேன் மதுர சுவையும் சுவைத்தவர்களை மீண்டும் சுவைக்க தூண்டும். சீசனுக்கு மட்டுமல்லாமல், வருடம் முழுவதும் கிடைக்காதா என்று ஏக்க வைக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் இனிமையான சுவை மட்டுமல்ல, அதில் அரிய வகை மருத்துவ குணமும் உள்ளது. புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி மாம்பழத்தில் இருப்பதாக, மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தி வரும் நோயாக புற்று நோய் இருந்து வருகிறது. இந்நோயில் இருந்து மக்களை காப்பாற்ற, புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் லக்னோவில் உள்ள நச்சியியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, புற்று நோயாளிகள் மற்றும் மாம்பழம் உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ஆராய்ச்சியில் புற்றுநோய் பாதித்த சுண்டெலிக்கு, மாங்காய் கொடுத்து ஆராய்ந்த பொழுது, அதன் புற்று நோய் கட்டிகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோய் கட்டிகள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு காரணம் மாங்காய் மற்றும் மாம்பழத்தில் உள்ள லூபியோல் என்ற வேதிப்பொருள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த லூபியோல் புற்றுநோய்க்கு எதிராக மட்டுமில்லாமல், இன்னும் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கும் மாம்பழம் தீர்வாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், நாம் வழக்கமாக சாப்பிடும் பழங்களோடு. மாம்பழத்தையும் சேர்த்து கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஜாக்கிரதை!