உடல் பருமனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
உடல் பருமனை தடுக்க, வரும் முன் காப்பது அவசியம். குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க வேண்டும். ஒருவர் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து தான், அவர் அதிக எடையுடன் இருக்கிறாரா அல்லது உடல் பருமனாக இருக்கிறாரா என்பது கணக்கிடப்படுகிறது. அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் இருக்கும்போது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் தான், அதை வரும் முன் காக்க வேண்டியது அவசியம். சிறு வயதிலேயே, உடல் பருமனை தடுக்க, குழந்தைகள் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றில், அதிக நேரம் செலவிட அல்லது விளையாட விடக்கூடாது; ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். நடுத்தர வயதில், உணவு மற்றும் வாழ்க்கை முறையில், கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் பருமன் ஏற்பட்டு விட்டால், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம், உடல் எடையைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். எடை குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆபத்தை விளைவிக்கும். அவை உடல் எடையை குறைக்கலாம்; ஆனால், நரம்பு மண்டலம், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகள் பாதிக்கப்படும். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே, உடல் எடையை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக உடல் பருமன் உடையோருக்கு, தேவைப்பட்டால் மட்டுமே, மருத்துவர் அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பார். சமச்சீரான உணவும்; உடற் பயிற்சியும் தான், உடல் எடையைக் குறைக்க, ஆரோக்கியமான முறை.மா. வெங்கடேசன்உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்,சென்னை98402 43833