உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / வீரத்தின் விளைநிலம் அஞ்சலையம்மாள்...

வீரத்தின் விளைநிலம் அஞ்சலையம்மாள்...

நடந்து முடிந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், பலரது கவனத்தையும் பெற்றவர் விடுதலைப் போராட்ட தியாகி மறைந்த அஞ்சலையம்மாள்...பெரியார்,அம்பேத்கார்,காமராசர்,ஜான்சி ராணி ஆகியோருடன் சேர்த்து மாநட்டு வளாகத்திலும்,முகப்பிலும் வைக்கப்பட்டிருந்த நெடிதுயர்ந்த 'கட்அவுட்'களில் இடம் பெற்றிருந்தார்.நடிகர் விஜய் பேசும்போது, சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாளை கட்சியின் வழிகாட்டியாக மானசீகமாக ஏற்போம் என்றார்.நமக்கும் இவர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது, தெரிந்துகொண்டபின் அவர் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.கடலுாரில் அம்மாக்கண்ணு-முத்துமணி என்ற இணையருக்கு 1890 ஆம் ஆண்டு ஜீன் 1 ஆம் தேதி பிறந்தவர்தான் அஞ்சலை.ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்ததார் அதற்கு மேல் அன்றைய காலச்சூழ்நிலையில் படிக்க முடியவில்லை.பின்னர் அதே ஊரைச் சேர்ந்த முருகப்பா என்ற நெசவுத்தொழிலாளியை மணந்தார்.முருகப்பா நெய்துதரும் துணிகளை அஞ்சலை பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்தார், அதன்மூலம் நாட்டு நடப்புகளை அறிந்தார் வெள்ளையரிடம் அடிமைப்பட்டு இருப்பதை வெறுத்தார்.பெரியாருடன் நெசவுத் தொழில் விற்பனையில் ஈடுபடும் போது அவருடனான கொள்கைளால் ஈர்க்கப்பட்டார், பெண் என்பவள் வீட்டில் முடங்கிப்கிடப்பவள் அல்ல ஆணுக்கு நிகராகப் போராடக்கூடியவளே என்பதை நாட்டிற்கு உணர்த்த தானே களத்தில் இறங்கினார்.மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்ப்பட்டு அது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார் அந்தவகையில் காந்தியின் போராட்டங்களை கையில் எடுத்த முதல் தென்னிந்திய பெண்ணாக அஞ்சலை திகழ்ந்தார்.போராட்டத்திற்கு தேவைப்படும் நிதிக்காக தனது நிலபுலன்கள் மற்றும் வீடுகளையும் விற்று செலவு செய்தார் இதை அறிந்த மகாகவி பாரதி புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்து அஞ்சலையம்மாளை சந்தித்து பாராட்டிவிட்டு சென்றார்,கூடவே பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கழகத்தின் போது பல சிப்பாய்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்யக் காரணமாயிருந்த 'ஜேம்ஸ் நீல்' என்ற ஆங்கிலேயே படைத்தளபதியின் நினைவாக 1860ல் அவருக்கு ஒரு சிலையை பிரிட்டிஷ் அரசு நிறுவியது.அந்த சிலையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது ஆவேசத்தின் உச்சத்தில் இருந்த அஞ்சலையம்மாள் தனது மகள் அம்மாக்கண்ணுவுடன் கலந்து கொண்டு சிலையை உடைத்தெறிந்தார்,இதன் காரணமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் பெற்றார்.சிறைத்தண்டனையின் முடிவில் இவர்களை சந்தித்த மகாத்மா ,அஞ்சலை அம்மாளுடன் இருந்த அம்மாக்கண்ணுவை தனது வார்தா ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார் அங்கு அவர் லீலாவதி என்ற பெயரில் வளர்ந்தார்.காந்தியின் மீது பெரும் மதிப்பு கொண்ட அஞ்சலையம்மாள் காந்தியின் அனைத்து போராட்டங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்,1931 ல் கடலுாரில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரப் போராட்டத்தின் போது போலீசாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார் இருந்தும் சிகிச்சை பெற மறுத்து தொடர்ந்து பேராட்ட களத்தில் இருந்தார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வேலுார் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்,அப்போது அவர் ஆறுமாத கால கர்ப்பவதி,குழந்தை பிறக்கும் சமயத்தில் விடுப்பில் வெளிவந்த அவர் குழந்தை பிறந்து பதினைந்து நாட்களுக்கு பிறந்த குழந்தையுடன் ஜெயிலுக்கு சென்று மிஞ்சிய தண்டனைக் காலமான இரண்டு மாத தண்டனையை நிறைவு செய்துவிட்டு வெளியே வந்தார்.ஜெயிலில் இருந்த போது பிறந்ததன் காரணமாக குழந்தைக்கு ஜெயில் வீரன் என்று பெயரிட்டார் பின்னாளில் அவர் ஜெயவீரன் என்று அழைக்கப்பட்டார்.அதே ஆண்டில் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மாதர் சங்க காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.அடுத்த ஆண்டு காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களை திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தி ஒன்பது மாத கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.விடுதலையாகி வெளிவந்ததும் அந்நியத்துணி எதிர்ப்பு மற்றும் எரிப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி சிறைக்கு சென்றார்.1934 ல் கடலுார் வந்த காந்தி,அஞ்சலையம்மாளை சந்திக்க முயன்றார் அன்றைய பிரிட்டிஷ் அரசு அதற்கு தடைவிதித்தது இதை அறிந்த அஞ்சலையம்மாள் மாறுவேடத்தில் யாருக்கும் தெரியாமல் வந்து காந்தியை சந்தித்தார் இவரது இந்த துணிச்சலைப் பாராட்டிய காந்தி இவரை 'தென்னாட்டு ஜான்சி ராணி' என்று அழைத்து பெருமைப்பட்டார்.1940ல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று 6 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றுக் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று பல நகரங்களுக்கும் சென்று ஆவேசமாகப் பேசினார் அரசுக்கு எதிரான பிரசங்கம் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இவரைப் போன்றவர்களின் போராட்டங்களால்தான் நம்நாடு விடுதலை அடைந்தது ஆகவே இவரைப் போன்றவர்களை கவுரவிக்கவேண்டும் என்று கருதி தியாகி பட்டம் வழங்கி ஒய்வூதியத்தையும் அரசு அறிவித்தது.இந்த இரண்டிற்காகவும் நான் பேராடவில்லை என்று கூறி தியாகி பட்டத்தை ஏற்கவும்,ஒய்வூதியத்தை பெறவும் மறுத்துவிட்டார்.கடலுார் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் நெசவாளிகளுக்காவும்,விவசாயிகளுக்காகவும் உரத்த குரல் கொடுத்தார்.தொகுதியில் நீண்ட காலமாக நிலவிவந்த தண்ணீர் பிரச்னையை கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்துவைத்தார் இதன் காரணமாக இன்றும் அந்த வாய்க்கால் 'அஞ்சலை வாய்க்கால்' என்றே அழைக்கப்டுகிறது.தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்துக் கட்சிப் பணிக்காகவும் விடுதலைப் போராட்டத்திற்காகவும் செலவு செய்தார்,கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது அவர் ஆதரவாளர்கள் சிலர் வீட்டை மீட்டனர், அதை அஞ்சலை பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்பதால் மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர்.சிதம்பரம் அடுத்துள்ள சி. முட்லூர் என்ற சிற்றூரில் தனது மூத்த மகன் காந்தியுடன் குடியேறி வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த அஞ்சலையம்மாள் 20 பிப்ரவரி 1961 அன்று தன் 71-ஆம் வயதில் காலமானார். அவர் காலமான கையோடு அவரது வரலாறும் கூட கிட்டத்தட்ட புதைக்கப்பட்டுவிட்டது.இப்போது தமிழக வெற்றிக் கழகம் அஞ்சலையம்மாள் வரலாறை துாசுதட்டி எடுத்து எடுத்துள்ளது.நாட்டிற்காக பேராடிய, சிறை செல்வதற்கு அஞ்சாத, சிங்கப்பெண்ணாக வாழ்ந்து மறைந்திட்ட அஞ்சலையம்மாள் வரலாறை இந்த நாடும் மக்களும் வருங்காலமும் அறிந்து கொள்ளட்டும்.வாழ்க பாரதம்-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venkatesa perumal k
நவ 20, 2024 13:10

2 ஆண்டுகளுக்கு முன்பே பாஜக அஞ்சலை அம்மாள் புகழை வெளிக்கொண்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகே அவர் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வருகிறது அதன் பிறகே தமிழக அரசு அவருக்கு சிலை அமைத்து புகழ் செய்தது. விஜய் வன்னியர் இன மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக அஞ்சலை அம்மாள் புகழை பயன்படுத்துவது போல் தெரிகிறது


M Ramachandran
நவ 06, 2024 23:55

ஓ இது தானா விஜய் மேல் கோபம் வருத்தம் ஏற்பட . முன்பே ஏற்காதவது பதவி கொடுத்து நம்முடன் வைத்திருக்கலாமென என்று இப்போ நினைக்க தோணுது


samvijayv
நவ 06, 2024 13:26

போறபோக்கில் பார்த்தால்.., விஜயின் கட்சி மாநாட்டில் வைத்த "கட்அவுட்" மூலமாக தான் திருமதி.அஞ்சலையம்மாள் அனைவர்க்கும் தெரியும் என்று கூறுவார்கள் போல இருக்கு சிங்கராம்.. ஆமைக்கறி சைமன் குரலில் சொல்வதனில்.


naadodi
நவ 04, 2024 21:07

கழகத்திற்கும் கலகத்திற்கும் அத்தனை ஒற்றுமை.


Anantharaman Srinivasan
நவ 03, 2024 20:46

எந்த அடக்கு முறைக்கும் அஞ்சாதவெள்ளையனை எதிர்த்த இவ்வளவு பெரிய தியாகி அஞ்சலையம்மாள் பெயரிலேயே விஜய் கட்சியை தொடங்கியிருக்ககலாம்.


chennai sivakumar
நவ 02, 2024 18:14

இவரைப் போன்று நிறைய தியாகிகள் வரலாறு மறைக்க பட்டு உள்ளது. விஜய் மூலமாக வெளி வந்து உள்ளது. நாளை அஜய் மூலமாக வேறு ஒருவர் தியாகம் வெளியில் வரலாம்.


P Bala
நவ 02, 2024 10:12

அஞ்சலை அம்மாளின் கொள்ளுப்பேரன் எழிளன் தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.


Matt P
நவ 06, 2024 08:47

திமுகவில் ஏன் போய் சேர்ந்தார்? இது தான் காலத்தின் கோலம் என்பதோ. திமுகவுக்கு தான் தேசியம் பிடிக்காதே.


Matt P
நவ 06, 2024 12:28

பள்ளிப்பாடத்தில இவரை விட முக்கியமானவங்க என்று திமுக கருதுகிறவர்களை எல்லாம் வைக்கணும்னா இவரை மாதிரி ஆளுங்களை இருட்டடிப்பு செய்தால் தானே முடியும். பல ஆண்டுககாலமா ஆட்சியில் இருந்தும் இவரை திமுகவில் யாருக்கும் தெரியல. இதில வேற வர கொள்ளு பேரன் எழிலன் என்பவர் திமுகவில் எம் ல் ஏ ஆவாம் .


karthik
நவ 02, 2024 09:17

இவரை பற்றி கூட ஒரு நடிகன் சொன்னால் தான் தெரிகிறது தமிழனுக்கு.. அந்த அளவிற்கு தமிழர்களை எதுவும் தெரியாத சிந்திக்க தெரியாத ஆட்டு மந்தைகளாக மாற்றி வைத்திருக்கிறது திராவிட கும்பல் ஆட்சி. அதன் நீட்சியில் இப்போது விசை


shanmugam subramanian
நவ 01, 2024 17:36

1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் என்பதற்கு பதிலாக் கழகம்என்று உள்ளது. வரலாறு அறிந்து கொண்டது துயரங்களிலும் துணிவுவோடு போராடியவர்கள் வாயிலாக அடைந்த சுதந்திரத்தை காப்பது நம் கடமை. நன்றி, வணக்கம்.


முக்கிய வீடியோ