உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / கடலில் வீணாகும் காவிரி தண்ணீர், விவசாயிகள் கண்ணீர்.

கடலில் வீணாகும் காவிரி தண்ணீர், விவசாயிகள் கண்ணீர்.

கர்நாடகாவில் இருந்து வாதாடி,போராடி,படாதபாடுபட்டு பெற்ற காவிரி நீர் முறையான சேமிப்பு திட்டமிடல் இல்லாததால் கடந்த 5 நாட்களாக கடலில் கலந்து வீணாகிக்கொண்டு இருக்கிறது.கடந்த மாதம் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை.வெகுவேகமாய் நிரம்பிய அணையில் இனியும் நீர் தேக்கிவைத்தால் பிரச்னை என்பதால் அணைக்கு வரும் நீரை அப்படியே உபரி நீராக வெளியேற்றியது கர்நாடக அரசு.இதனால் நிரம்பியது மேட்டூர் அணை.மேட்டூர் அணையை திறக்கப்போகிறோம், வரக்கூடிய தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் நடந்தது என்ன?திறந்துவிடப்பட்ட தண்ணீரை பல ஏரிகளில் சேமித்து வைக்க வேண்டிய அரசே அதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை.விளைவு மேட்டூரில் இருந்து வெளியேறிய நீர் திருச்சி முக்கொம்பு வரை வந்து பின்னர் காவிரியாகவும்,கொள்ளிடமாகவும் பிரிகிறது.காவிரியாக பிரியும் ஆற்றைவிட கொள்ளிடம் ஆறு அகலமானது,இதன் காரணமாக தண்ணீர் வரும் வேகத்தைப் பார்த்த அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டனர்.இப்படி கொள்ளிடத்தில் எப்போதாவது கரை புரண்டு வரும் தண்ணீரை குறிப்பிட்ட அளவு தடுத்து நிறுத்தி குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பனையை 463 கோடி ரூபாய் செலவில் கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள், கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். 99 சதவீத வேலைகள் முடிந்துவிட்டது என்று சொன்னாலும் இன்னமும் செயல்பாட்டிற்கு வராததால் அந்த தடுப்பனையையும் தாண்டி கொள்ளிடம் பாலம் வழியாக கடந்து பழையாறு என்ற இடத்தில் கடலில் கலந்து வீணாகிவருகிறது.கடந்த 2 ஆம் தேதியில் இருந்து இன்று வரை ஐந்து நாட்களாக பல லட்சம் கனஅடி நீர் வீணாகிவிட்டது.இப்படி ஒரு பக்கம் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்க தஞ்சாவூர் மாவட்டம் கடையக்குடியில், வறண்டு கிடக்கும் 134 ஏக்கர் பரப்பளவு கொண்ட அய்யனார்குருக்கள் ஏரியில் நீர் நிரப்ப வலியுறுத்தி, ஏரிக்கு நடுவில் விவசாயிகள், பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்படி காவிரி கடை மடையில் உள்ள பல ஏரிகள் வறண்டு கிடக்க கண் எதிரே தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைப் பார்த்து விவசாயிகள் கண்கலங்குகின்றனர்.இன்னும் எத்தனை வருடம்தான் இப்படி வராது வரும் அமுத நீர் போன்ற மழை நீரை வீணாக்கப்போகிறோம் என்பதே அவர்களது ஆதங்கம்.எல்லா அரசியல் அதிகார கலச்சார நிகழ்வுகளையும் ஒத்திவைத்துவிட்டு விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்கும் நடவடிக்கையில் அரசு முழுமூச்சாக இறங்குமா?இறங்கவேண்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
அக் 17, 2024 14:34

விவசாயிகள் மட்டும் இல்லை, எதிர்காலத்தில் இந்த நாட்டின் பொக்கிஷங்களாக நிலம், மக்கள், காப்பாற்றப்படவேண்டும் என்று இனம் தினம் துடித்து வருகின்றனர், இருந்து என்ன செய்வது, யாராக இருந்தாலும் கையேந்தும் இடத்தில்தான் இன்று எல்லாமே இயங்கிக்கொண்டு இருக்கிறது, காலம் தான் பதில் சொல்லவேண்டும், யாராவது ஒருவராவது மக்களுக்காக நன்மை செய்ய முன்வரமாட்டார்களா , வந்தே மாதரம்


நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2024 06:15

நீராதாரம் பெருக்க வழியிருக்கா என்றால் டாஸ்மாக்கிணை நோக்கி நகரும் அரசு ,


chandrakumar
ஆக 07, 2024 10:00

காசு வாங்கி ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும். யார் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என மனசாட்சியுடன் சிந்தித்து வாக்களித்து இருந்தால், ஆள்பவர்களும் மனசாட்சியுடன் நடக்க வாய்ப்பு இருந்திருக்கும். கடந்த 60 ஆண்டுகளில் எத்தனை TMC தண்ணீர் சேமிப்புக்கு அணை கட்டியுள்ளனர் எதுவுமே இல்லை.... திருத்த வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல மக்கள்....


Ramona
ஆக 06, 2024 20:21

யார் என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் இஷ்டப்படி தான் .. மத்திய அரசின் வறட்சி நிவாரணம் வாங்கி, விவசாயிகள் கவலை போக்கப்படும்.


புதிய வீடியோ