UPDATED : ஜன 24, 2026 08:45 PM | ADDED : ஜன 24, 2026 08:43 PM
அன்பே வா: இது புலிகளின் காதல் தருணம்!அந்த ஒரு உறுமல்... மொத்தக் காட்டின் நிசப்தத்தையும் உடைக்கிறது. காட்டில் உள்ள விலங்குகள் யாவும் அச்சத்தில் உறைகின்றன. அந்த உறுமலுக்குச் சொந்தமான புலி, எப்போதுமே காட்டின் அசைக்க முடியாத ராஜா! இந்த ராஜ வம்சத்தின் பின்னணியில்தான் எத்தனை எத்தனை கதைகள்?புலி எப்போதுமே தனித்து வாழும் சுபாவம் கொண்டது. காட்டில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் காணப்படும் அதன் நகக்கீறல்கள், 'இது என் ராஜ்ஜியம், யாரும் உள்ளே நுழையக் கூடாது' என்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு. சுமார் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ஒரு ஆண்புலி 180 முதல் 250 கிலோ வரையும், பெண்புலி 100 முதல் 160 கிலோ வரையும் எடை கொண்டவை.புலிகள் பெரும்பாலும் இரவில்தான் வேட்டையாடும். இவை சிறுத்தையைப் போல இரையைத் துரத்திச் செல்வதில்லை; மாறாக, அமைதியாகப் பதுங்கிச் சென்று ஒரே பாய்ச்சலில் இரையின் கழுத்தைப் பிடித்து அதன் கதையை முடித்துவிடும். ஒரு பெரிய காட்டெருமை சிக்கினால், அதைத் தனது இருப்பிடத்திற்கு இழுத்துச் சென்று நிதானமாகச் சாப்பிடும். ஒருமுறை வயிறாரச் சாப்பிட்டுவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அது வேட்டைக்குச் செல்லாமல் ஓய்வெடுக்கும்.இனப்பெருக்கக் காலத்தில் பெண் புலி தனது விருப்பத்தைச் சத்தம் மற்றும் வாசனை மூலம் வெளிப்படுத்தும். அப்போது பல்வேறு பகுதிகளில் தனித்து வாழும் ஆண்புலிகள் அங்கு கூடும். 'பெண் புலியுடன் இணைவது யார்?' என்பதில் அவற்றுக்குள் பெரும் சண்டையே நடக்கும். அந்தப் போரில் வெற்றிபெறும் வலிமையான புலியுடன், பெண் புலி சுமார் இரண்டு வார காலம் இணைந்து வாழும்.பெண் புலியின் கர்ப்ப காலம் அதிகபட்சம் 105 நாட்கள்தான். பொதுவாக இரண்டிலிருந்து நான்கு குட்டிகளை அது ஈன்றெடுக்கும். குட்டிகள் பிறந்தவுடன் பெண் புலி செய்யும் முதல் வேலை, தந்தை புலியை விரட்டுவதுதான். சில நேரங்களில் தந்தை புலியே குட்டிகளைக் கொல்ல வாய்ப்புள்ளதால், அவற்றைப் பாதுகாக்க ரகசியமான இடத்திற்குத் தாய் புலி கொண்டு செல்லும். இரண்டு ஆண்டுகள் வரை தன் குட்டிகளை வளர்த்து, வேட்டைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்து, அவர்களைச் சுதந்திரமான 'இளைஞர்களாக' மாற்றிய பின்னரே தாய் புலி அவர்களைப் பிரியும்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பெஞ்ச் புலிகள் காப்பகம், உலகின் சிறந்த காப்பகங்களில் ஒன்று. புகழ்பெற்ற 'ஜங்கிள் புக்' கதை எழுதப்பட அடிப்படையாக அமைந்தது இந்த நிலப்பரப்புதான். 29 குட்டிகளை ஈன்று சாதனை படைத்த 'காலர்வாலி' புலி வாழ்ந்ததும் இதே மண்ணில்தான்.தற்போது இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆண் மற்றும் பெண் புலிகள் காதலுடன் உலவி வருகின்றன. இது அந்தப் புலிகளுக்கு மட்டுமல்ல, விதவிதமான கோணங்களில் அவற்றைப் படம்பிடிக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் கொண்டாட்டமான காலம்தான்!-எல்.முருகராஜ்