UPDATED : டிச 20, 2025 03:30 PM | ADDED : டிச 20, 2025 03:28 PM
மத்திய காசாவின் சவைடா பகுதியில் உள்ள ஒரு சிறிய கூடாரத்திற்குள், 23 வயதான யாசின் மரூப் படுத்திருக்கிறார். அந்தத் தற்காலிகக் கூடாரத்தின் வெப்பமும், புழுதியும் அந்த இளைஞனின் காயங்களை விடவும் அவனது மனதை அதிகமாகத் தாக்குகின்றன. கடந்த மே மாதம் இஸ்ரேலியத் தாக்குதலில் சிதறிய குண்டுகள், அவனது வாழ்க்கையை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றின.யாசின் ஒரு துடிப்பான இளைஞன். ஆனால் இன்று அவனது இடது கால் துண்டிக்கப்பட்டுவிட்டது; அவனது வலது காலும் மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. நவீன மருத்துவ வசதிகளோ, முறையான வலி நிவாரணிகளோ இல்லாத ஒரு சூழலில், தனது கால்களை இழந்த வேதனையை விடவும், இனி தன் குடும்பத்தை எப்படிக் காப்போம் என்கிற வேதனை அவனது கண்களில் தெரிகிறது.வீடிழந்து, உடமை இழந்து இன்று சவைடாவின் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய பிளாஸ்டிக் கூடாரமே அவனது உலகம். சுற்றி அவனது குடும்பத்தினர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் அன்பான வார்த்தைகள் அவனுக்கு ஆறுதல் தந்தாலும், அடிப்படைத் தேவைகளான உணவு, தூய்மையான தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் போராட வேண்டியுள்ளது.யாசினின் கதை தனிப்பட்ட ஒன்றல்ல. காசாவின் ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான கதைகள் புதைந்து கிடக்கின்றன. போர் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அது யாசினைப் போன்ற இளைஞர்களின் கனவுகளை, ஆரோக்கியத்தை மற்றும் எதிர்காலத்தைச் சிதைக்கும் ஒரு கோரமான உண்மை. ஒரு காலத்தில் தன் சொந்தக் காலால் ஓடித் திரிந்த அந்த இளைஞன், இன்று மற்றவர்களின் உதவியின்றி நகரக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது போரின் உச்சக்கட்டக் கொடுமை.யாசினின் காயங்கள் ஆறலாம், ஆனால் அவன் இழந்த அவயவங்கள் மீண்டும் வராது. அந்தச் சிறிய கூடாரத்தின் அமைதியில், அவ்வப்போது கேட்கும் குண்டுச் சத்தங்களுக்கு இடையே, யாசினும் அவனது குடும்பமும் ஒரு விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள். அந்த விடியல் அவர்களுக்கு அமைதியையும், மருத்துவ உதவியையும் கொண்டு வரும் என்பது மட்டுமே அவர்களின் இப்போதைய ஒரே நம்பிக்கை.-எல்.முருகராஜ்