உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / இருபக்கமும் உயிர்கள்... இடையில் ஒரு பெண்!

இருபக்கமும் உயிர்கள்... இடையில் ஒரு பெண்!

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை கத்திமுனையில் நிறுத்தும். ஒரு பக்கம் 'கடமை' எனும் இரும்புச் சட்டம், மறுபக்கம் 'மனிதாபிமானம்' எனும் ஈரமான இதயம். இந்த இரண்டிற்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு நொடியில் நாம் எடுக்கும் முடிவுதான் நமது ஆளுமையைச் சொல்லும். அப்படிப்பட்ட ஒரு அக்னிப் பரீட்சையில் வென்று, இன்று தமிழகத்தின் 'ரியல் ஹீரோயினாகக்' கொண்டாடப்படுகிறார் அருள்ஞானடெல்பின்.ஜனவரி 3-ம் தேதி, இரவு 7:45 மணி. தஞ்சை மாவட்டம் பின்னவாசல் - சித்தாதிக்காடு இரயில்வே கேட் பகுதி இருளில் மூழ்கிக்கிடந்தது. ராமேஸ்வரம் - தாம்பரம் இரயில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தது. 29 வயதான கேட் கீப்பர் அருள்ஞானடெல்பின், முறைப்படி சிக்னல் பெற்று இரும்பு கேட்டை மூடினார்.அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம், மூடியிருந்த கேட்டிற்கு முன்னால் வந்து நின்றது. 'சீக்கிரம் கேட்டைத் திறங்க, எங்க வீட்டுப் பொண்ணு சீரியஸா இருக்கா... ஆஸ்பத்திரி போகணும்!' - உறவினர்களின் கதறல் அந்த இரவு நேர அமைதியைக் கிழித்தது.கேட் கீப்பர் அருள்ஞானடெல்பினுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. ரயிலோ நெருங்கி வந்துவிட்டது. இந்தச் சூழலில் கேட்டைத் திறப்பது என்பது, சீறி வரும் ரயிலை விபத்துக்குள்ளாக்குவதற்குச் சமம்.'இப்போ கேட்டைத் திறக்க முடியாதுங்க... ரயில் ரொம்பப் பக்கத்துல வந்துடுச்சு,' என்று அவர் சொன்னபோது, வந்தவர்கள் கொதித்துப்போனார்கள். 'ஒரு உயிரா? உன் சட்டமா?' என்று அவர்கள் எகிறினர்.அப்போதுதான், அருள்ஞானடெல்பினிடம் இருந்து ஒரு முதிர்ச்சியான பதில் வந்தது. 'என்னை நம்பி இந்த இரயில்ல ஆயிரக்கணக்கான உயிர்கள் வருதுங்க... அவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும். ஆனா, அந்தப் பக்கம் என் ஸ்கூட்டர் நிக்குது, சாவியைத் தாரேன்... அந்தப் பெண்ணைத் தூக்கிக்கிட்டு தண்டவாளத்தைத் தாண்டிப் போய் என் ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போங்க ப்ளீஸ் !' என்று கலங்கிய கண்களுடன் கூறினார்.வந்தவர்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு மறுபக்கம் ஓடினர். கூடவே அருளும் ஓடியபடி தனது ஸ்கூட்டர் சாவியைக் கொடுத்தார். ஆனால், அதற்குள் மறுபக்கம் நின்றிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனது ஆட்டோவில் உறவினர்களுடன் ஏற்றிக்கொண்டு பறந்தார்.அவர்கள் அந்தப் பக்கம் சென்ற அடுத்த சில நிமிடங்களில் ரயில் தண்டவாளத்தைக் கடந்தது. ஒரு நொடித் தாமதம் அல்லது ஒரு சிறு விதிமீறல் எத்தனை குடும்பங்களைச் சிதைக்கும் என்பதை உணர்ந்து, இரும்பு மனுஷியாக நின்று தனது கடமையைச் செய்த அருளைக் கேட்டிற்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பாராட்டினர்.பதட்டம் தணிந்து அருள் பெருமூச்சு விட்டார். அந்தப் பெருமூச்சில், 'நாம் எந்த உயிருக்கும் பாதகமாக இல்லை' என்ற நிம்மதி கலந்திருந்தது.-எல்.முருகராஜ்தகவல்,படம்:சுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

saiprakash
ஜன 13, 2026 17:53

வாழ்த்துக்கள் சகோதரி


GUNA SEKARAN
ஜன 10, 2026 11:43

நன்றிகள்


krishnamurthy
ஜன 08, 2026 15:52

பாராட்டுக்கள்


PR Makudeswaran
ஜன 08, 2026 10:46

நீ நல்லா இரும்மா இறைவன் உன்னை நன்றாக வாழ வைப்பான்.


Bahurudeen Ali Ahamed
ஜன 07, 2026 10:40

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி


நிக்கோல்தாம்சன்
ஜன 07, 2026 07:36

வாழ்த்துக்கள் டெல்பின் வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி