1999 ஆம் ஆண்டு நமது இமயத்தின் உச்சியான லடாக்கில் கார்கில் போர் உச்சகட்டத்தை தொட்டுக் கொண்டு இருந்தது.களத்தில் போராடிக்கொண்டிருந்த நமது வீரர்களுக்கு தேவையான தளவாடங்கள் உள்ளீட்ட பொருட்களை ஒரு பெண் அதிகாரி சிறிதும் ஒய்வெடுக்காது சுறுசுறுப்பாக வழங்கிக் கொண்டிருந்தார்,உண்மையில் அவர் அந்த நேரம் பூரண ஒய்விலும்,அமைதியிலும் இருக்கவேண்டும் காரணம் அவர் மூன்று மாத கர்ப்பினியாக இருந்தார்,ஆனாலும் தாய்மையை விட தாய்நாட்டை நேசித்தன் விளைவு அவர் காட்டிய வேகம் விவேகம் சுறுசுறுப்பு எல்லாம்.அவர்தான் கேப்டன் யாஷிகா ஹத்வால் தியாகிடேராடூனில் ஒரு ராணுவக் குடும்பத்தில் பிறந்த யாஷிகாவிற்கு ஏழு வயதிருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார்.போர்களத்தில் இருக்கும் போதே இறந்து போன அவரது தந்தையை சுமந்து கொண்டு வீரர்கள் ஊருக்குள் வரும் போது ஊரர் காட்டிய மரியாதையும் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் தந்தையைப் போல செலுத்திய அன்பும் யாஷிகாவை அந்த வயதிலேயே ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வைத்தது.அந்த முடிவு தானும் தந்தையைப் போல ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு உழைப்பது என்பதுதான்.அதற்கான வாய்ப்பும் வந்தது,1994 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தனது ராணுவ பயிற்சியை முடித்தார்.களத்தில் உள்ள வீரர்களுக்கு தேவையான உணவு,உடை,உபகரணங்களை வழங்கிடும் பணி கிடைத்தது.கார்கில் போர் வெடித்த போது களத்திலேயே இருந்து உதவிகள் செய்தாக கட்டாயம் அதை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக செய்தார் சக அதிகாரிகள் கூட 'கர்ப்பமாக இருக்கிறீர்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளாலாமே' என்றபோது அதை மறுத்தார்.அதன்பிறகு 'ஆபரேஷன் ரைனோ'வின் போது, அசாமின் தீவிர பாதிப்புள்ள பகுதிகளில் பணியாற்றினார், 'ஆபரேஷன் விஜய்' இன் போது அவர் தீவிரமாக பங்கேற்றார்.இப்படி தனக்கான ராணுவ சேவையை முழுமையாக முடித்துக் கொண்டு ஒய்வு பெற்றவர் பிறகு , பாதுகாப்பு அமைச்சக திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். ஆஷா பள்ளியின் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுடன் பணிபுரிந்த அனுபவம், அவர்களை பொது சமூகத்தில் மரியாதையுடன் வாழ ஊக்குவித்தது, இன்றுவரை அவரது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது.தற்போது அவர் புனேவில் உள்ள சிம்பியோசிஸ் சுகாதார மையத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.இந்திய இராணுவத்தில் பெண்கள் தங்கள் திறமை, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உலகையே வியக்க வைத்து வருகின்றனர் அவர்களுக்கு முன்னோடியாக இருந்தவரான கேப்டன் யாஷிகாவிற்கு தற்போது 51 வயதாகிறது வயது என்பது வெறும் எண்தான் என்று சொல்பவர் நாடு தோறும் பயணித்து தனது அனுபவத்தின் மூலமாக கல்லாரி மாணவியர்,பெண் தொழில் முனைவோர்,பெண்கள் அமைப்பில் கலந்து கொண்டு அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் பேச்சளராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.கர்கில் போர் வீராங்கனை, ராணுவத் தலைமைத்துவ பயிற்சியாளர், மற்றும் தேசியச் சின்னமாக விளங்கும் கேப்டன் யாஷிகா ஹட்வால் தியாகியுடன், மறக்க முடியாத ஒரு மதியத்தை ITC கிராண்ட் சோலாவில், FICCI FLO சென்னை பிரிவு சிறப்பாக நடத்தியது. தலைவி நியாதி ஏ. மேத்தாவின் உற்சாகமான தலைமையில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தைரியம், தெளிவு, மற்றும் உருவாகும் பயணத்தைப் பற்றிய ஆழமான உரையாடலுக்காக ஒன்று கூடியனர்.“நான் இராணுவத்தில் சேர்ந்தது சிறப்பாக நடத்தப்படுவதற்காக அல்ல, சமமாக நடத்தப்படுவதற்காக,” என்றவர் “மரியாதை உங்கள் பணியால், உங்கள் முடிவுகளால், செயல்பாட்டில் இருப்பதால்தான் கிடைக்கும்.”என்றார்.அவரது வலிமையான வார்த்தைகள், பெண்களை தங்களுடைய இடத்தை தாமே கைப்பற்ற, தங்கள் திறமையை அறிந்து, தன்னம்பிக்கை குறைவால் தங்களது திறனை இழக்காமல் தலைமைத்துவப் பொறுப்புகளில் முன்னேற ஊக்குவித்தன.எனது கதை தேசபக்தியைப் பற்றியது மட்டுமல்ல, தடைகளை உடைப்பது, தைரியத்தை மறுவரையறை செய்வது மற்றும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காண பல தலைமுறை பெண்களை ஊக்குவிப்பதுதான் என்று பேசினார் என்பதைவிட கர்ஜித்தார் என்பதே சரியாக இருக்கும் என்பதற்கு அவருக்கு கிடைத்த பலத்த கைதட்டலே காரணம்.-எல்.முருகராஜ்.