UPDATED : மே 23, 2026 04:54 PM | ADDED : மே 23, 2026 04:51 PM
ஜம்மு-காஷ்மீரின் பனி படர்ந்த மலைச்சிகரங்களுக்கு இடையே, இந்திய ராணுவத்தின் ரத்தமும் சதையுமான அசாத்திய வீரத்தையும், எல்லையைக் காக்க அவர்கள் செய்த தியாகங்களையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒரு புதிய வரலாற்றுப் பொக்கிஷம் திறக்கப்பட்டுள்ளது. அதுதான், இந்திய - பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் இந்திய ராணுவத்தால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சௌர்யா காதா' தேசபக்தி நினைவிட வளாகம்!புவியியல் ரீதியாக மிகவும் சவாலான, அதே சமயம் இயற்கை எழில் கொஞ்சும் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் எல்லையோரப் பகுதியில் இந்த வளாகம் அமைந்துள்ளது. மிக முக்கியமாக, கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,200 அடி உயரத்தில், எப்போதும் கடுமையான பனிப்பொழிவு நிறைந்து காணப்படும் புகழ்பெற்ற 'சாதனா கணவாய்' மற்றும் சம்ஷாபரி மலைத்தொடரின் மடியில் இது கம்பீரமாக வீற்றிருக்கிறது. எல்லைக் கோட்டுக்கு மிக அருகில் இது அமைந்திருப்பது, நாட்டின் பாதுகாப்பில் இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.'சௌர்யா காதா' என்ற இந்திச் சொல்லுக்கு 'வீரத்தின் கதை' அல்லது 'வீர வரலாறு' என்று பொருள். தங்தார் மற்றும் குப்வாரா எல்லைப் பகுதிகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற போர்கள், அண்டை நாடுகளின் அத்துமீறல்கள் மற்றும் ஊடுருவல்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் போது, நமது இந்தியப் படைவீரர்கள் காட்டிய துணிச்சலை ஆவணப்படுத்தி, அதை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த வளாகத்தின் முதன்மை நோக்கமாகும்.இந்த வளாகத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே இங்குள்ள கட்டிடங்களை அலங்கரிக்கும் கண்கவர் சுவரோவியங்கள் தான். கட்டிடங்களின் சுவர்கள் முழுவதும் ராணுவ வீரர்களின் போர்க்களக் காட்சிகள், நள்ளிரவிலும் எல்லையைக் காக்கும் உன்னத தருணங்கள், நவீன போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் படங்கள் மிகத் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை அப்படியே ஒரு நிஜப் போர்க்களத்திற்குள் அழைத்துச் சென்ற உணர்வைத் தருகின்றன.இது தவிர, ராணுவத்தினர் போர்க்காலத்தில் பயன்படுத்திய உண்மையான ஆயுதங்கள், அரிய வரலாற்றுப் புகைப்படங்கள் மற்றும் ராணுவ ஆவணங்கள் அடங்கிய ஆவணக் கலைக்கூடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவிடம் வெறும் ராணுவத்தின் வீரத்தை மட்டும் பேசவில்லை; எல்லையோரப் பகுதிகளில் வாழும் காஷ்மீரி மக்களின் தியாகங்களையும் இங்கு பதிவு செய்துள்ளது. பல இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய ராணுவத்திற்குத் துணையாக நின்ற உள்ளூர் மக்களின் பங்களிப்பையும், ராணுவத்திற்கும் அவர்களுக்குமான தொப்புள்கொடி உறவையும் போற்றும் வகையில் சிறப்புப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளைப் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களாக மாற்றும் முயற்சிகளை அரசு தற்போது தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சாதனா கணவாய் வழியாகப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய மையமாக இந்த 'சௌர்யா காதா' வளாகம் மாறத் தொடங்கியுள்ளது.கடுமையான குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை, உறைய வைக்கும் பனிப்பொழிவு மற்றும் அண்டை நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு இடையே, நமது நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் எவ்வாறு கண்ணிமைக்காமல் காக்கிறார்கள் என்பதைப் பொதுமக்கள் நேரில் கண்டு உணரும் உன்னத வாய்ப்பை இந்த நினைவிடம் வழங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், 'சௌர்யா காதா' என்பது வெறும் செங்கல், காரைகாரைக் கட்டிடம் அல்ல; அது இந்தியத் தாயகத்தைக் காக்கத் தம் இன்னுயிரைத் தந்த மாவீரர்களின் வாழும் ஆவணம்!-எல்.முருகராஜ்