UPDATED : ஜூலை 17, 2026 07:55 PM | ADDED : ஜூலை 17, 2026 07:53 PM
தனது ஓவியங்களால் ஒரு கிராமத்தையே மீட்டெடுத்த 'ரெயின்போ தாத்தா'வின் கதை இது.சீன உள்நாட்டுப் போருக்குப் பின் (1949-இல்) தைவானுக்கு வந்த தேசியவாத ராணுவ வீரர்களுக்காகத் தைவானின் தைச்சுங் நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட எளிமையான குடியிருப்புகளில் குடியேறியவர்களில் ராணுவ வீரர்களில் ஹுவாங் யுங்-பு என்பவரும் ஒருவர்.காலப்போக்கில் இங்கிருந்த பெரும்பாலான வீடுகள் வசிக்க தகுதியில்லாத அளவிற்கு சிதிலமடைந்துவிட்டது.இதன் காரணமாகவும் புதிய கட்டுமானப் பணிகளை இந்தப் பகுதியில் அரசு துவங்கவிருப்பதன் காரணமாகவும் இங்கிருந்தவர்கள் பெரும்பாலானவர் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர், ஆனால் வயதான ஹுவாங் யுங்-புவுக்கு எங்கு செலவது எனத் தெரியவில்லை மேலும் இந்த இடத்தை விட்டு போகவும் அவரும் மனமில்லை,இந்த நிலையில் 2008-ஆம் ஆண்டில், தனது 86-ஆவது வயதில் தனது வீட்டின் சுவரில் ஒரு சிறிய பறவையின் ஓவியத்தை முதன்முதலில் வரைந்தார் ஹுவாங். அதுவே அவரது கலைப்பயணத்தின் தொடக்கம்.பின்னர் பூனைகள், நாய்கள், விசித்திர மனிதர்கள், பறவைகள் மற்றும் விண்வெளி வீரர்கள் என அவரது கற்பனையில் உதித்த கதாபாத்திரங்களை வீட்டின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைத்தளங்கள் மற்றும் எஞ்சியிருந்த வீடுகள் முழுவதும் தீட்டினார்.பல நாள் கழித்து இக்கிராமத்தின் வழியே சென்ற பல்கலைக்கழக மாணவர்களின் கண்ணில் இந்த வண்ணமயமான ஓவியங்கள் பட, அவர்கள் அதனைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். இது உலக அளவில் வைரலாகி, சுற்றுலாப் பயணிகளைக் கவரத் தொடங்கியது.நாள்தோறும் இந்த இடத்திற்கு அதிக அளவில் உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்கள் சுற்றுலா பயணிகளாக வந்து ரெயின்போ கிாரமத்து ஓவிய வீட்டையும் ஓவியர் ஹுவாங்கையும் சந்தித்து மகிழ்ந்தனர்.இந்த இடத்திற்கு மக்கள் மத்தியில் எழுந்த பெரும் ஆதரவைக் கண்ட தைவான் அரசு, தன் முடிவை மாற்றி, இந்த இடத்தை மட்டும் இடிக்காமல் ஒரு 'கலைப் பூங்காவாக' அறிவித்தது.1,200 வீடுகளுடன் பிரம்மாண்டமாக இருந்த இக்குடியிருப்பில், இன்று எஞ்சியிருப்பது ஐந்து வீடுகள் மட்டுமே. தற்போது அங்கு யாரும் வசிப்பதில்லை. இந்த கிராமத்தின் கடைசி மனிதராக வசித்து வந்த இந்த இடத்தை கலைப்பூங்காவாக மாறுவதற்கு வித்திட்ட 'ரெயின்போ தாத்தா'வும் தனது 101-ஆவது வயதில் (ஜனவரி 2024-இல்) இறந்தார்.தற்போது இந்த இடத்தை தைச்சுங் மாநகராட்சி அரசு தனது நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொண்டு உள்ளூர் கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் உதவியோடு பழமை மாறாமல் புதுப்பித்துள்ளது.இன்று தைவானின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் 'ரெயின்போ கிராமம்', தனி ஒரு மனிதனின் கற்பனைத் திறனும் விடாமுயற்சியும் ஒரு வரலாற்றையே எப்படி மாற்றி எழுத முடியும் என்பதற்கு வாழும் சாட்சியாகத் திகழ்கிறது.-எல்.முருகராஜ்