சமீபத்திய கனமழை வறண்டு கிடந்த தமிழகத்தின் பல ஏரி, குளங்களை நிரப்பியுள்ளது. அந்த ஏரிகளில் காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி ஏரியும் ஒன்றாகும்.இந்த கோவிந்தவாடி ஏரி அருகே உள்ள உயரமான மின் கோபுரத்தில் ஒரு அசாதாரண காட்சி தென்பட்டது. அந்த மின் கோபுரத்தின் இரும்புத் தகடுகளின் மீது சில பறவைக் கூடுகள் காணப்பட்டன. அந்த கூடுகளில் தாய்பறவைகள் தம் குஞ்சுகளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தன.இவ்வளவு ஆபத்தான இடத்தில் இப்படிப் பறவைகள் கூடு கட்டுவதில்லையே என்ற கேள்விக்கான பதிலைத் தேடியபோது கிடைத்த தகவல்கள் நெஞ்சத்தை நெகிழவைத்தன.அங்கிருந்தவை நீர்க்கோழிப் பறவைகள் - “குளத்தின் காவலன்” என்ற செல்லப்பெயராலும் அறியப்படுகின்றன. காரணம், அவை நீரில் உள்ள கொசுவண்டுகள், புழுக்கள் போன்றவற்றை உண்டு அழித்து சூழலை சுத்தமாக வைத்திருக்கின்றன.சிறிய உடல், சிவப்பு மூக்கு, அதன் முனையில் மஞ்சள் நிறம் — இப்படியான அழகான தோற்றம் கொண்டவை இப்பறவைகள். நீரில் மிதந்து உணவு தேடும் நீர்க்கோழியின் பிரதான உணவு குளத்தில் உள்ள புழுக்கள், சிறிய மீன்கள், தாவர விதைகள் ஆகியவையே.“கக்-கக்” என்ற அதன் தனித்துவமான குரல் தன் குஞ்சுகளை அழைக்கும் சத்தமாகவும், குடும்பத்தினருக்கு ஆபத்து வரும் போது எச்சரிக்கை தரும் ஒலியாகவும் பயன்படுகிறது.நீர்க்கோழி பெரும்பாலும் குளத்தின் நடுவிலோ அல்லது ஓரங்களில் உள்ள நாணல் போன்ற புல்லிலோ கூடு கட்டும். மழைக்காலத்தில் முட்டையிட்டு அடைகாக்கும்; குஞ்சுகள் வெளிவந்ததும் சில நாட்களுக்கு உணவு ஊட்டி, பின்னர் நீந்த பழக்கி தன் வழியை அவைத் தானே கற்கச் செய்யும்.ஆனால், இம்முறை அதன் வாழ்வியல் சுழற்சியில் ஒரு திடீர் சோதனை வந்தது. முட்டையிட வேண்டிய நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஏரியில் நீர் நிரம்பி, நாணல்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. எங்கே முட்டையிடுவது என்று தாய்ப்பறவைகள் தவித்தன.அதற்குத் தெரிந்தது ஒரே இடம் — அருகில் இருந்த மின் கோபுரம். வேறு வழியின்றி, அவை அந்த மின் கோபுரத்தின் இரும்புக் கம்பிகளில் கூடு அமைத்து அதில் முட்டையிட்டன. பலத்த காற்று வீசியது, மழை கொட்டியது, ஆனாலும் அவை அசையவில்லை. தங்கள் முட்டைகள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாயும் தன் சிறகுகளால் அவற்றை கவசமிட்டுக் கொண்டிருந்தது. கடும் குளிரிலும் தன் உடலின் சூட்டைக் குஞ்சுகளுக்குக் கொடுத்தது.அந்த அர்ப்பணிப்பிற்கு பலன் கிடைத்தது — உரிய காலத்தில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன. தாய்ப்பறவைகள் அவற்றிற்கு உணவூட்டியபடி, இப்போது மகிழ்ச்சியுடன் தன் குஞ்சுகளைச் சுற்றி வருகிறது. தாய் என்றால் அன்பின் வடிவம்; அந்த நீர்க்கோழிகளும் அதற்கு உயிர்த்த சான்று. தன் குஞ்சுகளை மீண்டும் பாதுகாப்பாக குளத்திற்குக் கொண்டு செல்வதையும் அவை நன்றாக அறிந்திருக்கும்.வெள்ளம், காற்று, மழை — எதுவும் அந்த தாயின் நெஞ்சை உடைக்கவில்லை, உறுதியை குலைக்கவில்லை. மனிதன் “பாதுகாப்பு” என்ற சொல்லைக் கற்பிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், இந்த நீர்க்கோழிகள் தன் செயலால் உலகிற்கு தாய்மையின் உண்மையான அர்த்தத்தை சொல்லிக்கொடுக்கின்றன.மின் கம்பங்களில் நாணல் கூடு போல தொங்கும் ஒவ்வொரு சிறிய இல்லமும் நம்மை வியப்பிலும் ஆழ்ந்த பாசத்திலும் ஆழ்த்துகிறது. அந்த கூடுகள் வெறும் பறவைகள் கட்டிய உறைவிடங்கள் அல்ல — அவை தாய்மையின் கோபுரங்கள், அன்பின் ஆலயங்கள், கடமையின் அடையாளங்கள்.பிள்கைகளைப் பெற்று ஆளாக்குவதற்குள் எல்லா 'தாயும்' படும்பாடு பெரும்பாடுதான்.இயற்கையில் ஒவ்வொரு 'தாயும்' தன் பிள்ளைகளுக்காக கடலையும் கடக்கும் வீராங்கனைகள்தான். அதற்கான காட்சியும் சாட்சியும்தான் — இந்த மின் கோபுரங்களில் காணப்படும் நீர்க்கோழிகள்- எல். முருகராஜ்