நாம் சிறுவர்களாக இருந்து சைக்கிள் ஓட்டிப் பழகிய காலத்தில், சாகசத்திற்காக முன் சக்கரத்தை மேலே தூக்கி 'வீலிங்' (Wheeling) செய்திருப்போம். ஆனால், அந்த சாகசம் எல்லாம் சில அடி தூரத்தோடு முடிந்துவிடும். சில நிமிடங்கள் செய்வதற்கே கைகள், கால்கள் கடுமையாக வலித்து உடல் சோர்வடைந்துவிடும். ஆனால், முன் சக்கரமே இல்லாமல் வெறும் பின் சக்கரத்தின் துணையை மட்டுமே கொண்டு, ஒரு மனிதரால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞர். அவர்தான் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சனீத்இளைஞர்களைச் சீரழிக்கும் மிகப்பெரிய அரக்கனான போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக, உலகையே வியக்க வைக்கும் வகையில் ஒரு துணிச்சலான விழிப்புணர்வுப் பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார்.25 வயதான சனீத், அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர் மற்றும் திறமையான சாகச சைக்கிள் ஓட்டுநர் ஆவார். சிறு வயதிலிருந்தே சைக்கிள் மற்றும் பைக் சாகசங்களில் ஆர்வம் கொண்ட சனீத், ஒருமுறை பைக் ஸ்டண்ட் செய்யும்போது பெரிய விபத்தைச் சந்தித்தார். அதன் பிறகு பைக் சாகசங்களை விடுத்து, பாதுகாப்பான முறையில் அதே சமயம் சவாலான ஒன்றாக எதைச் செய்யலாம் என்று யோசித்தார்.சைக்கிளில் நீண்ட தூரம் பயணம் செய்வது சாதாரண விஷயமாகிவிட்டதால், 'நாம் செய்யும் பயணம் உலக அளவில் தனித்துவமாக இருக்க வேண்டும், அப்போதுதான் அது மக்களின் கவனத்தை ஈர்க்கும்' என்று நினைத்தார். அதன் விளைவாக உதித்ததுதான், 'ஏன் நாம் 'வீலிங்' செய்துகொண்டே நீண்ட தூரம் பயணிக்கக் கூடாது? அதற்கு முன் சக்கரமே தேவையில்லையே, அதை கழற்றிவிட்டால் என்ன?' என்ற விசித்திரமான சிந்தனை.உடலின் எடையைச் சமநிலைப்படுத்திப் பயணிக்கும் தனது சொந்த உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்க எண்ணிய அவர், முதன்முதலில் தனது ஊரிலேயே முன் சக்கரத்தைக் கழற்றிவிட்டுப் பழகினார். அதில் பெற்ற வெற்றியையும், மக்களின் பாராட்டுகளையும் கண்ட பிறகே, இதனை ஒரு சமூக விழிப்புணர்வுப் பயணமாக மாற்றத் திட்டமிட்டார்.'இளைஞர்களே போதைப்பொருளைத் தவிர்த்து, விளையாட்டிலும் சாகசங்களிலும் கவனத்தைச் செலுத்துங்கள்' என்ற உன்னதமான தாரக மந்திரத்தை ஏந்தி சனீத் களம் இறங்கியுள்ளார்.இவரது பயணத்தின் மிகக் கடினமான அம்சம் என்னவென்றால், இவர் சந்தையில் கிடைக்கும் சாதாரண ஒற்றைச் சக்கர சைக்கிளைப் பயன்படுத்தவில்லை. தனது சாதாரண கியர் சைக்கிளின் முன் சக்கரத்தை முழுமையாகக் கழற்றிவிட்டு, வெறும் பின் சக்கரத்தை மட்டுமே தரையில் முட்டச் செய்து, 'வீலிங்' செய்தபடியே பயணிக்கிறார். முன் சக்கரம் இல்லாத சைக்கிளில், உடலின் எடையைச் சமநிலைப்படுத்தி, கியர்களை மாற்றி, செங்குத்தான மலைப்பாதைகளில் பயணிப்பது என்பது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமான ஒரு பயிற்சியாகும்.இது சனீந்தின் முதல் பயணம் அல்ல. இதற்கு முன்பே இந்தியாவின் இரு கடினமான எல்லைகளைத் தனது ஒற்றைச் சக்கரத்தால் தொட்டுள்ளார்: இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியிலிருந்து வடகோடியான காஷ்மீர் வரை, சுமார் 4,000 கிலோமீட்டர்களுக்கும் மேல் பயணித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார். கடல் மட்டத்திலிருந்து 19,000 அடிகளுக்கும் மேல் உயரத்தில் உள்ள, உலகின் மிக உயரமான மோட்டார் வாகனச் சாலையான லடாக்கின் 'உம்லிங் லா' கணவாயை ஒற்றைச் சக்கரத்தில் கடந்த முதல் தென்னிந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.காஷ்மீரையும் லடாக்கையும் வென்ற சனீத்தின் தற்போதைய இலக்கு, நேபாளத்தில் உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் ஆகும். சனீத் தனது இந்த அசாத்தியமான எவரெஸ்ட் விழிப்புணர்வுப் பயணத்தைக் கடந்த 2024 அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கினார். தற்போது தமிழகத்தில் பழனி பகுதியில் உள்ளார்,அடுத்த வருடம் இதே மாதத்தில் எவரெஸ்ட் அடிவாரத்தை அடைவார்.கார்ப்பரேட் ஸ்பான்சர்கள் ஏதுமின்றி, முழுக்க முழுக்க மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது ஆடம்பர தங்குமிடங்களைத் தவிர்த்து, சாலையோர எரிபொருள் நிலையங்கள் அல்லது தற்காலிகக் கூடாரங்களில் தங்கித் தனது இலக்கை நோக்கி நகர்கிறார். சனீத் தனது அன்றாடப் பயண விவரங்களையும், சவால்களையும் 'Saneed Stunts' என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.சனீந்தின் இந்தப் பயணம் வெறும் சாகசம் மட்டுமல்ல; போதைப்பொருள் என்ற இருளில் மூழ்கும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வெளிச்சக் கீற்று. தடைகளைத் தகர்த்து ஒற்றைச் சக்கரத்தில் இமயமலை நோக்கிப் பாயும் இந்த இளைஞரின் முயற்சி போற்றத்தக்கது! அவரது இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துவோம்!-எல்.முருகராஜ்