UPDATED : அக் 16, 2026 08:04 PM | ADDED : அக் 16, 2026 08:02 PM
சென்னை ஐ.டி நிறுவனத்தின் கீ போர்டுகள் மீது கவனம் செலுத்த வேண்டிய விரல்கள், இன்று தன் தாத்தா, தந்தையின் கைமண் வாசனையைச் சுமந்த பரம்பரைத் தொழிலைத் தூக்கிப் பிடிப்பதற்காக 3டி இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன.வேலூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகேஷ், பி.இ. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு சென்னையில் கைநிறைய சம்பளத்துடன் ஐ.டி வேலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நலிவடைந்து வரும் தன் குடும்பத்தின் மண்பாண்டத் தொழிலையும், கொலு பொம்மை தயாரிப்பையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதியான முடிவோடு, அந்த வேலையைத் துறந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார்.நான்கு தலைமுறைகளாக மண்பாண்டத் தொழில் மற்றும் கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குடும்பத்தில் பிறந்தவர் முகேஷ். காலப்போக்கில் இந்தத் தொழில் நலிவடைந்து வருவதைக் கண்ட அவர், தன் தந்தையுடன் இந்தத் தொழில் முடிந்துவிடக் கூடாது என்று எண்ணினார்.தொழிலை மீட்டெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதில் நவீன காலத் தொழில்நுட்பப் புகுத்த வேண்டும் என்று திட்டமிட்டவர், இதற்காக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் பல சவால்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் அனைத்தையும் தகர்த்து இன்று இந்தத் தொழிலில் வெற்றிகரமாக சாதித்துக் காட்டியுள்ளார்.'பிலமண்ட்' எனப்படும் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தச் சிலைகள், வழக்கமான மண் பொம்மைகளை விட மிகவும் எடை குறைவானதாகவும், அதே சமயம் அதிக உறுதியுடனும் காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் எந்தவொரு வடிவத்தையும் அச்சு பிசகாமல் கொண்டுவர முடிகிறது. இதனால் சிலைகள் தத்ரூபமான அழகோடு காட்சி தருகின்றன.: அதிகபட்சமாக ஆறு அடி உயரம் வரை சிலைகளைத் துல்லியமாகத் தயாரிக்க முடியும்.முகேஷின் இந்த நவீன முயற்சிக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் ஊர் கோயில்களுக்காகவும், வீடுகளுக்காகவும் இவரிடம் பிரத்யேகமாகச் சிலைகளைச் செய்து வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆடி மாதத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.தன் பரம்பரைத் தொழிலை நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்த்திய திருப்தியுடன் வலம் வருகிறார் முகேஷ். தொடர்புகொள்ள விரும்புகிறவர்கள் 76674 40210 என்ற எண்ணில் பேசலாம்.படம்,தகவல்:தங்ககவின்,வேலுார்.