உள்ளூர் செய்திகள்

கோது போல் உடம்பு

கரும்புச் சாறு குடித்திருக்கிறீர்கள்தானே? கரும்பில் இருந்து எடுக்கப்படுவது ஜூஸ். சரி, சாறைக் குடித்து விட்டோம். சாறு பிழிந்த பிறகு, மிச்சமிருக்குமே அந்தக் கரும்பின் பகுதிக்கு என்ன பெயர் தெரியுமா? கோது. கிராமத்தில் இருப்பவர்கள் இதை அறிந்திருப்பார்கள். '..........கரும்பூர்ந்தசாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்கோதுபோல் போகும் உடம்பு.' என்னும் நாலடியார் பாடலில், 'நாம் செய்த அறச் செயல்கள்தான் நம்முடன் வரும். உடம்பானது, உயிர் போனபிறகு, கறும்புச் சாறு எடுத்த கோதுபோல் வெறுமையாகி விடும்' என்று கூறப்பட்டுள்ளது.ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலும், கரும்பின் சக்கை 'கோது' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.'விரும்பு நாள் போலன் வியல் நலம் உண்டான்கரும்பின் கோது ஆயினேம் யாம்'(39ஆம் பாடல்)'சாறு பிழிந்து எடுக்கப்பட்ட கரும்பின் கோ(து)தை போல, பயனற்றுப் போய் விட்டோம் நாங்கள். தலைவன் பெரிதும் மாறிவிட்டான். எங்களை மறந்துவிட்டான்' என்பதே இவ்வரிகளுக்கான பொருள்.கரும்பு ஆலைகளில் சாறு எடுத்த பிறகு, கொப்பரைகளில் வெல்லப்பாகு தயாரிப்பர். அப்போது அடுப்பு எரிக்க 'கோது' பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !