சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேறும் பிரிட்டன்
பிரிட்டிஷ் அரசில் சூரியன் மறைவதில்லை என்று ஒரு காலத்தில் சொல்லப் படுவதுண்டு. அதாவது, உலகின் எல்லா பாகங்களிலும் பிரிட்டன் தனது காலனிகளை நிறுவியிருந்ததால், அந்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சூரிய வெளிச்சம் எப்போதும் இருக்கும் என்பது அதன் பொருள். மொரீஷியஸ் தீவுகளை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டன், அந்நாட்டிற்கு சுதந்திரம் அளிக்கும்போது, சாகோஸ் தீவை மட்டும் தக்கவைத்துக் கொண்டது. நீண்டகாலம் நடந்து வந்த இது குறித்த வழக்கு, ஐ.நா.சபையின் நீதிமன்றத்தில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பிரிட்டன் சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஐ.நா. நீதிமன்றம், தீர்ப்பளித்துள்ளது. மொரீஷியஸிலிருந்து சாகோஸ் தீவுகளைப் பிரித்தது அநீதியானது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.