அழுத்தம் வேண்டாம்
தொடர்ச்சியாக ஏற்படும் மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தைக் கூட்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 300 நபர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மது உபயோகம், உயர் இரத்த அழுத்தம் என்ற வரிசையில் மன அழுத்தமும் மாரடைப்புக்கான முக்கிய காரணியாக செயல்படுகிறது. மனத்தில் நிலவும் உணர்வுபூர்வமான அழுத்தங்கள் இதய வால்வுகளையும், ரத்தக் குழாய்களையும் பாதிக்கும் அபாயம் அதிகம். ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி மேற்கொண்ட ஆய்வில் அச்சம், கோபம் போன்ற உணர்வுகள் தூண்டப்படுகையில் மூளையின் அமிக்டலா (amygdala)என்ற பகுதி, எலும்பு மஜ்ஜைகளுக்கு கூடுதல் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் கட்டளையை அளிப்பது தெரிய வந்துள்ளது. இப்படி மிகுதியாக உற்பத்தியாகும் வெள்ளை அணுக்கள் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற சிக்கல்களுக்கு காரணமாகின்றன. ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் அஹமது தவகோல் (Dr Ahmed Tawakol) இந்த ஆய்வு முடிவுகள் குறித்துப் பேசும்போது, “இந்த ஆய்வுகளின் மூலம் உணர்வுகளை சமநிலையில் பேணுவது மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது என்று தெரியவந்துள்ளது” என்கிறார்.