புவி காக்கும் ஓசோன்
மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் (Ozone) துகள். இதன் வேதிக் குறியீடு O3. பூமியின் மேற்பரப்பில் 17 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் 98% ஓசோன் வாயுவால் நிரம்பியிருக்கிறது. இந்த இடத்தில் உள்ள அடர்த்தியான பகுதி ஓசோன் படலம் (Ozone Layer) எனப்படுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் வல்லுநர் கிறிஸ்டியன் ஃபிரடரிக் ஷோன்பியன் (Christian Fredereich Schonbein) 1840ல் ஓசோனை கண்டறிந்தார். சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச்சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் எனப் பிரிக்கலாம். அகச்சிவப்புக் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தைச் சுமந்து வந்து பூமியைச் சூடாக்குகிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்து சேராதபடி பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி.