உள்ளூர் செய்திகள்

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (18) - யாருக்கு ஓட்டு போடுவது?

முன் குறிப்பு: அப்பா, அம்மா, வீட்டில் இருக்கும் எல்லாப் பெரியவர்களும் என்னுடைய இன்றைய டயரியை எடுத்துப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். (வழக்கமாக என்னைக் கேட்காமல் என் டயரியை யாராவது எடுத்துப் படித்தால் எனக்குப் பிடிக்காது.)நேற்று ஞாநி மாமா என்னை ஒரு கேள்வி கேட்டார். “மாலு, எந்த சினிமாவுக்குப் போக வேண்டும் என்று நீ அப்பாவிடம் சொல்லுவதுண்டா?”“சொல்லுவேனே. எல்லா சினிமா பத்தின நியூசும் எப்படியும் என் காதுக்கு வரும். எந்தப் படம் நல்ல படம் என்று அப்பாவுக்கு சொல்லுவேன். எனக்குப் பொதுவாக காமெடிப் படம்தான் பிடிக்கும்.”மாமா அடுத்த கேள்வி கேட்டார்.“இன்றைக்கு என்ன சமையல் செய்யலாம் என்று அம்மாவுக்கு எப்போதாவது சொல்லுவாயா?”“தினமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்குப் பிடித்த மிளகு ரசம் செய்யச் சொல்லி இன்றைக்குக்கூட அம்மாவிடம் சொன்னேன். மிளகு சாப்பிட்டால் அம்மா தூக்கம் வராமல் படுகிற கஷ்டம் கூடப் போய் விடும் என்று சொன்னேன்.”மாமா என்னைத் தட்டிக் கொடுத்தார். “குட். இப்படி அன்றாடம் அவர்களுக்கு நல்ல நல்ல யோசனையெல்லாம் சொல்லுகிறாயே. ஒரு மிக முக்கியமான விஷயம் நடக்கப் போகிறதே அதைப் பற்றி என்ன சொன்னாய் ?”எதைப் பற்றி?“ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் நடக்கப் போகிறதே... அதில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று உன் யோசனையைச் சொன்னாயா?”ஓட்டுப் போடுவதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம். அதைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும் என்றேன். உடனே மாமா சொன்னார், “பெரியவர்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி, ஆட்சிக்கு வந்ததும், அது செய்யும் விஷயங்கள் பெரியவர்களை மட்டும் அல்ல, உன்னை மாதிரி சிறியவர்களையும் அன்றாடம் நல்லவிதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கும், இல்லையா? அதனால் என்ன மாதிரி ஆட்சி உங்களுக்கு வேண்டும் என்று நீயும் பெரியவர்களிடம் சொல்லலாமே. யோசி.” என்றார்.யோசித்தேன். எனக்குத் தோன்றியதை எல்லாம் பட்டியல் இட்டிருக்கிறேன்.1. தினமும் பள்ளிக் கூடம் போய்வரும் வழியில் தவறாமல் இரண்டு பேராவது தெரு ஓரம் மது குடித்துவிட்டு விழுந்து கிடப்பதைப் பார்க்கிறேன். எங்கள் வீட்டு வேலை செய்யும் லட்சுமித் தாயி, தன் வீட்டில் எல்லா ஆண்களும் எப்போதும் குடித்துவிட்டு குடும்பத்துக்கே தொல்லையாக இருப்பதைப் பற்றி அடிக்கடி என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். குடியை மொத்தமாக ஒழிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதைக் குறைக்கவாவது ஏதாவது செய்யவேண்டும்.2. என்னோடு இரண்டு வருடம் முன்பு படித்த நான்கைந்து சிநேகிதிகள் இப்போது வெவ்வேறு ஊரில் வெவ்வெறு ஸ்கூலில் படிக்கிறார்கள். போனில் பேசும்போது அவர்கள் ஒவ்வொருத்தரும் ஒரே படிப்புக்கு வெவ்வேறு ஃபீஸ் கட்டுவதாக சொல்லுகிறார்கள். பள்ளிக் கூடத்தில் இருக்கும் வசதியும் வெவ்வேறாக இருக்கிறது. ஏன் எல்லாருக்கும் ஒரே மாதிரி நல்ல தரத்தில் நல்ல படிப்பு சமமான செலவில் கிடைக்கிற மாதிரி செய்யக்கூடாது?3. படிப்பு மாதிரியேதான் மெடிசினும் இருக்கிறது. ஒரே நோய்க்கு ஒவ்வொரு ஹாஸ்பிடலில் வெவ்வேறு ரேட். அதிக பணம் கொடுத்தால்தான் நன்றாக குணம் ஆகும் என்றால், அப்படிக் கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்வது? 4. பாட்டி காலமான பிறகு, அப்பாவுடன் சில சர்ட்டிபிகேட்டுகள் வாங்குவதற்காக நிறைய அரசாங்க அலுவலகங்களுக்குப் போனேன். போன இடத்தில் எல்லாம் அப்பாவிடம் ஏதாவது பணம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இவ்வளவு பணம் தர வேண்டுமா என்று அப்பாவிடம் கேட்டேன். ''சட்டப்படி ஒரு பைசா கூடத் தர வேண்டாம். எல்லாரும் லஞ்சமாகக் கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் இன்னும் ஆறு மாதமானாலும் நம் ஃபைல் நகராது'' என்று அப்பா என்னிடம் சொன்னார். அப்போது அப்பாவின் முகத்தைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. எல்லாருக்கும்தான் வேலை செய்ய சம்பளம் கொடுக்கிறார்களே, அப்புறம் என்ன இது லஞ்சம்? இப்படி லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்தால், கொடுப்பதற்கு பணம் வேண்டும் என்று நாமும் கிடைக்கிற வாய்ப்பில் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிடுவோம் இல்லையா? இதை நிச்சயம் ஒழிக்க வேண்டும். (எல்லா ஆபீசையும் கணினி மயமாக்கிவிட்டால் இதைக் குறைத்துவிடலாம் என்கிறது வாலு.)5. எங்கள் வீட்டில் எப்போதுமே தண்ணீர்ப் பஞ்சமே வந்தது கிடையாது. ஆனால் இந்த வருடம் முதல்முறையாகக் கொஞ்சம் தட்டுப்பாடு. ஏன் என்று கேட்டால், அப்பா சயின்ஸ் பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். வாட்டர் சைக்கிள் (சுழற்சி) தெரியுமில்லையா. ஆற்று மணலை அதிகமாகத் தோண்டி எடுப்பதால் ஆற்றில் தண்ணீர் இல்லை. மரங்களை வெட்டிக் கொண்டே போவதால் மழை குறைந்துவிட்டது. அப்படிப் பெய்தால் தப்பான பருவத்தில் பெய்கிறது. கேரளாவில் ஆற்று மணலை எடுக்கவே முடியாதாம். தடையாம். இங்கேயும் அப்படி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யும் என்று யோசியுங்கள். 6. சினிமா, டிவி, பேப்பர் எங்கே பார்த்தாலும் ஆண் ஒசத்தி, பெண் மட்டம் என்றும் பெண்ணை ஆபாசமாகக் காட்டுவதும் எல்லாம் முன்பை விட அதிகமாகிக்கொண்டே வருகிறது. தெருவில் இறங்கி நடந்தால் ஒரு டயலாக்கோ, பாட்டோ சொல்லி கேலி செய்ய ஒரு கும்பல் காத்திருக்கிறது. ஏன் நல்ல விஷயங்களை சொல்லித் தரும் சினிமா, டிவி நிகழ்ச்சி எல்லாம் அதிகமாக தயாரிக்கக்கூடாது? 7. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அடிக்கடி நம்மிடம் நமக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும். நமக்கு ஒரு பிரச்னை என்றால் அரசாங்கத்தில் யாரிடம் எப்படிப் போய்ச் சொல்வது என்பது ஈசியாக இருக்கவேண்டும். 8. யார் ஆட்சிக்கு வந்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கிற மாதிரி ஆளாக இருக்கக்கூடாது. தன் கட்சியில் கூட இருக்கிற நாலு பேரிடம் பேசி, வெளியிலும் எல்லார் கருத்தையும் கேட்டு அப்புறம் முடிவெடுக்கிற மாதிரியான தலைவர்களாக இருக்க வேண்டும். என் அப்பா அப்படித்தான். வீட்டில் எந்த விஷயமானாலும், எல்லாரையும் கூப்பிட்டுச் சொல்லுவார். எல்லார் ஐடியாவையும் கேட்பார். அப்படிக் கேட்கும்போது நல்ல ஐடியா கிடைத்தால் தன் ஐடியாவைக் கூட மாற்றிக் கொள்ளத் தயங்கமாட்டார். குடும்பத்தில் இப்படி கூட்டாக எல்லாரையும் கலந்து பேசி முடிவெடுக்கிற மாதிரிதான் ஆட்சியில் இருப்பவர்களும் தங்களுக்குள் கலந்து பேசக் கூடிவர்களாக இருக்கவேண்டும். 9. அப்புறம் இந்த மலர்க் கிரீடம், ரூபாய் நோட்டு மாலை, நிரந்தர முதலமைச்சர் என்றெல்லாம் ஹிட்லர், முசோலினி மாதிரி சர்வாதிகாரிகளாக உருவாகும் தலைவர்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கூட நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. வேட்பாளார்களுக்கு மட்டும்தான் செலவுக் கட்டுப்பாடாம். கட்சிக்குக் கிடையாதாம். அது என்ன நியாயம்? அப்புறம் எப்படி பணக்காரக் கட்சியும் ஏழைக் கட்சியும் ஒரே அளவில் போட்டியிடமுடியும்?அடுத்த ஐம்பது வருடங்களுக்கு இந்த ஊர் , இந்த நாடு, இந்த இயற்கை எல்லாம் என்னைப் போன்ற மாலு, பாலுக்களுடையது. பெரியவர்கள் பாட்டி மாதிரி எங்களுக்கு முன்பாகவே காலமாகிவிடுவீர்கள். ஆனால் இப்போது நீங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள் என்பது தொடர்ந்து எங்களைத்தான் பல வருடத்துக்குப் பாதிக்கும். யோசித்துப் போடுங்கள், ஆல் எல்டர்ஸ்!…..வாலுபீடியா 1: கிரேக்க நாகரிக காலத்திலும் உத்திரமேரூர் கல்வெட்டிலும் பழங்காலத்திலேயே தேர்தல் நடந்த ஆதாரம் இருந்தாலும், அப்போது எல்லாருக்கும் ஓட்டு கிடையாது. சமூகத்தின் மேட்டுக்குடிக்கு மட்டும்தான் ஓட்டு உரிமை இருந்தது. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான வாக்குரிமை என்பது உலகம் முழுவதும் ஏற்பட்டது 19, 20ஆம் நூற்றாண்டுகளில்தான்.வாலுபீடியா 2: தேர்தல் முடிவுகளை அலசி ஆராயும் முறைக்கு 'செப்பாலஜி' (Psephology) என்று பெயர். கிரேக்க மொழியில் 'செப்பாஸ்' என்றால் கூழாங்கல். ஏதென்ஸ் நகரில் ஓட்டுச் சீட்டாக கூழாங்கல்லைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !