அமேசான் இயக்குனர் குழுவில் இந்திரா நூயி
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் அமேசான். அமெரிக்காவின் சியாட்டில் நகரைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம், தனது இயக்குனர் குழுவில் புதிதாக இரு பெண்களை உறுப்பினர்களாக்கி உள்ளது. அவர்களில் ஒருவர், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (Chief Executive Officer - CEO) இந்திரா நூயி. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவரான இந்திரா நூயி, சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் படித்தார். பின்னர் ஐஐஎம் கல்கத்தாவில் பட்டமேற்படிப்பும், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் படித்தார்.1994இல் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்த இந்திரா நூயி, 12 ஆண்டுகளில் அதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு அக்டோபரில் அப்பொறுப்பில் இருந்து வெளியேறும் வரை, பெப்சிகோ நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றவர் நூயி. தகவல் தொடர்புத் திறன், குழுவோடு இணைந்து பணியாற்றுவது போன்ற திறன்களைப் பணியாளர்களிடையே வளர்ப்பது போன்றவற்றில் அக்கறை காட்டினார் நூயி. பெப்சிகோ நிறுவனத்தில் அவர் பணியாற்றிய 24 ஆண்டுகளில் ஆரோக்கியம் காக்கும் தயாரிப்புகளைத் தயாரிக்க, அதிகம் ஊக்குவித்தவர் என்றும் பாராட்டப் பெற்றார்.அமேசான், தன் இயக்குநர் குழுவில் ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக இருந்த ரோசலிண்ட் ப்ரூயரையும் (Rosalind Brewer) இந்திரா நூயியையும் சேர்த்துள்ளது. தற்போதைய அமேசான் இயக்குனர்கள் 11 பேரில், 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிர்வாகத்தில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற கருத்துகள் அந்நிறுவனத்திற்குள் எழத் தொடங்கிவிட்டது. இதற்காகவே, அமேசான், நூயி மற்றும் ப்ரூயர் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்களை இயக்குனர் குழுவில் நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.