உள்ளூர் செய்திகள்

தமிழகம் வரும் நாசா வீரர்!

“நிலவில் மனிதன் கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் விதமாக, உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்காவின் நாசா ஏற்பாடு செய்துள்ளது.” என்று பேச ஆரம்பித்தார் கயம்பு இராமலிங்கம். இவர், மாணவர்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு அழைத்துச் சென்று வருபவர்.“ஒவ்வொரு நாடும் கூட, தங்கள் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாங்கள், டான் தாமஸ் என்ற விண்வெளி வீரரைத் தமிழகம் அழைத்து வருகிறோம். இந்நிகழ்ச்சிக்கு 'அப்போலோ 50' என்றே பெயர் வைத்திருக்கிறோம். நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் முனைவர் டான் தாமஸ். இவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர். நாசா நிறுவனத்தில் சேர மூன்று முறை முயற்சி செய்து கடைசியில் வெற்றி பெற்றார். 1990இல் அமெரிக்காவின் விண்வெளிப் பயணத்தில் இவரும் இடம்பெற்றார். விண்வெளியில், 44 நாட்கள் தங்கி இருந்தார். அதன்பின், நாசாவின் பல விண்வெளி ஆராய்ச்சிகளில், தலைமைப் பொறுப்புகளை வகித்தார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு, வானியல் துறை படிப்பு, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வது பற்றி கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இவரை இங்கு அழைத்து வந்து மாணவர்களிடையே கலந்துரையாட வைக்கும்போது மாணவ/மாணவியர் விழிப்புணர்வு பெறுவார்கள். அவர்களுக்கு விண்வெளி ஆய்வுத் துறையில் ஆர்வம் ஏற்படும் என்று கருதுகிறோம். முதல் நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி அரங்கில் டான் தாமஸ் உரையாற்றுவார். பின்னர் வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் செய்ய உள்ளார்.” என்று தெரிவித்தார் இராமலிங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !