சுதந்திரச் செங்கோல்!
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.அப்போது, மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, ''இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை சிம்பாலிக்காக எப்படிப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்.நேருவுக்கு, எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது.நேரு, மூதறிஞர் ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார்.உடனே ராஜாஜி, “கவலை வேண்டாம், தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார். அதைப்போல நாமும் ஒரு செங்கோலைத் தயாரிப்போம். அதை வெள்ளைக்காரர்களிடமிருந்து நமது குருமார்களில் ஒருவர் மூலம், பெற்றுக் கொள்வோம்” என்றார்.நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். “நேரம் குறைவாக உள்ளது, உடனே செங்கோலுக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.ராஜாஜி, உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு செய்தியைச் சொன்னார். அவர், அந்த நேரத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இருந்தாலும், மகிழ்ச்சியுடன் செங்கோல் தயாரிக்கும் வேலையில் இறங்கினார்.செங்கோல் தயாரித்து, அதற்குத் தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் அச்செங்கோலைக் கொடுத்து, டில்லிக்குப் புறப்பட ஏற்பாடு செய்தார். கூடவே ஓதுவா மூர்த்திகளையும் உடன் அனுப்பினார். செங்கோல் மாற்றத்தின்போது, ஓதுவார் பாடுவதற்காக, தேவாரத்தில் இருந்து 'கோளறு பதிகம்' என்ற பதிகத்தில் இருந்து, பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார், திருவாவடுதுறை ஆதீனம்.கோளறு பதிகம், திருஞான சம்பந்தர் பாடியது. இந்தப் பதிகத்தைப் படித்தால், வானிலுள்ள கோள்கள் எந்த நேரத்திலும் நமக்கு நன்மையே பயக்கும் என்பது நம்பிக்கை.நேரு ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் அனைவரும் செங்கோலுடன் டில்லி சென்றனர்.அடிமைத் தளையில் இருந்து, பாரதம் விடுதலை பெறப்போகும் அந்த பொன்னான நேரத்துக்காக, பாரதமே கண் விழித்துக் காத்துக்கொண்டிருந்தது.ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடினார். பதினோராவது பாடலின் கடைசி வரியான 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்பதைப் பாடி முடிக்கும்போது, சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்தச் செங்கோல் பெற்ற நிகழ்வு, கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிடப்பட்டுள்ளது. அதில், கையில் செங்கோலுடன் ஜவஹர்லால் நேருவும் பண்டார சுவாமிகளும் உள்ளனர்.- த. சங்கர்