உள்ளூர் செய்திகள்

அழகியலுடன் அறிவியல் குழைத்தவர்!

'சுஜாதா' ரங்கராஜன்3.5.1935 -- 27.2.2008ஸ்ரீரங்கம், திருச்சி.'மெதுவாக ஐந்தாவது மாடிக்கு இறங்கினான்' இதுபோன்று தனித் தன்மையுடன் புதுமையைப் புகுத்தி எழுதுவது சுஜாதா ஸ்டைல். இதுதான் வாசகர்களை அவர் பின்னால் இழுத்து வந்தது. தன் கற்பனையாலும் சிந்தனையாலும் இளைஞர்களை நவீன உலகுக்குள் பயணிக்க வைத்தார். எழுதுவதில் தனக்கென ஒரு புதிய மொழிநடையை உருவாக்கி, அழகியலுடன் அறிவியல் புகுத்தி படைப்புகளைப் படைத்தார் சுஜாதா என்கிற ரங்கராஜன். 'சுஜாதா' என்பது அவரது மனைவியின் பெயர். தாத்தா, பாட்டி வீட்டில் ஸ்ரீரங்கத்தில் படித்து, வளர்ந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் மின்னணுவியலும் பயின்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவரது கல்லூரி நண்பர். திருச்சி கல்லூரியில் ஒரே பிரிவிலும், சென்னைக் கல்லூரியில் வேறு பிரிவிலும் படித்த இவர்களது நட்பு, கடைசி வரை தொடர்ந்தது. படித்து முடித்து விமானப் போக்குவரத்துத் துறையிலும், பின்னர் பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றினார் சுஜாதா. இலக்கியம், அறிவியல், துப்பறியும் கதைகள், புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை எனப் பல்துறை வித்தகர். இவரது முதல் கதை 1953இல் சிவாஜி பத்திரிகையில் வெளிவந்தது. எழுத்தின் எளிமைக்கு, சங்க இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்கும் அவர் எழுதிய உரைகளே சான்று. அன்றைய காலத்தில் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் மிகப் பிரபலம். அறிவியல் கதைகளில் ஆத்மா -- நித்யா, துப்பறியும் கதைகளில் கணேஷ் - - வசந்த் கதாபாத்திரங்களின் பெயர்களை வாசகர்கள் தங்களது குழந்தைகளுக்குச் சூட்டினார்கள்!என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற அறிவியல் கதைகளையும் 'ஏன், எதற்கு, எப்படி' என்கிற தலைப்பில் அறிவியல் கேள்வி பதில்களும் எழுதினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார். கணையாழி இதழின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும், விவாதங்கள், விமர்சனங்கள் போன்ற அவரது எழுத்துகள் வாசகர்களைக் கட்டிப்போட்டன.ஹாலில் ஒரு புத்தகம், தூங்கும் அறையில் வேறு ஒரு புத்தகம், குளியலறையில் இன்னொரு புத்தகம், பயணத்தின்போது ஒரு புத்தகம் எனப் படித்த சுஜாதா, எழுத்தின் வழியாக நம் மனங்களைக் கொள்ளை கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !