இனிய தமிழ் ஊற்று!
'கவியோகி' சுத்தானந்த பாரதி11.5.1897 - 7.3.1990சிவகங்கை.பன்மொழிப் புலவர், ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவர். தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தியவர், மொழிபெயர்ப்பில் முன்னோடி. கவிதை, நாடகம், வரலாறு, இதழியல் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் 'கவியோகி' சுத்தானந்த பாரதி.தொடக்கக் கல்வியை சிவகங்கையிலுள்ள திண்ணைப் பள்ளியில் படித்தார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலும் ஆன்மிக நாட்டமும் அவருக்கு இருந்தது. அரிஸ்டாடில், பிளாட்டோ போன்றோரின் படைப்புகளை இளம் வயதில் தானாகவே கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் தேர்ச்சி பெற்றார்.கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் வேதம், உபநிஷதங்களுடன் பிரெஞ்சு மொழி கற்று அம்மொழி படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். வாழ்வின் அன்றாட வழிநெறிகளை குறள் வடிவில் 'யோகசித்தி' நூலின் மூலம் வழங்கினார். ஆசிரியராகப் பணியாற்றியபோது ஆங்கிலம், புவியியல், கணிதம் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு எளிய வடிவில் கற்பித்தார். காந்தியடிகள் கைதானபோது, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு விடுதலை முழக்கங்களை எழுப்பினார். பல துறைகளிலும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது 'பாரத சக்தி' நூலுக்குக் கிடைத்தது.சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயா உயர்நிலைப் பள்ளியை சிவகங்கையில் நிறுவினார். வாழ்நாள் முழுக்க அன்னைத் தமிழை அலங்கரித்து வாழ்ந்தவர் கவியோகி.