உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஒரே இடத்தில் பாரத நாட்டியங்கள்:பிரம்மோற்சவத்தில் கோலகலம்!

ஒரே இடத்தில் பாரத நாட்டியங்கள்:பிரம்மோற்சவத்தில் கோலகலம்!

திருமலை திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் என்றாலே பக்தர்களின் மனக்கண்ணில் மிளிர்வது கம்பீரமான வாகனச் சேவைகளும், 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தர்களின் முழக்கமும்தான். , கடந்த ஏழு நாட்களாகத் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் இறைவனின் உலாவுக்கு முன்பாக அரங்கேறி வரும் அற்புதங்கள், ஆன்மீகத்தையும் கலைகளையும் இணைக்கும் ஒரு பெருவிழாவாக உருவெடுத்துள்ளன!மலையப்ப சுவாமி கம்பீரமாக வாகனங்களில் எழுந்தருளி வர, அவருக்கு முன்பாக நாடெங்கிலும் இருந்து வந்திருக்கும் கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்வுகள் காண்போரைக் மெய்சிலிர்க்க வைக்கின்றன.கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய தென்னக மாநிலங்கள் மட்டுமின்றி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் வடகோடி ஸ்ரீநகரில் இருந்தும் வருகை தந்துள்ள கலைக்குழுக்கள் மாட வீதிகளைத் தங்களின் பாரம்பரிய நடனங்களால் அதிரவைத்து வருகின்றன.பஞ்சாபின் துள்ளலான பாங்க்ரா,ராஜஸ்தானின் வண்ணமயமான கரகம் மற்றும் நாட்டுப்புற நடனங்கள்,கேரளாவின் கம்பீரமான கதகளி மற்றும் சிங்காரி மேளம்,தமிழ்நாட்டின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,ஸ்ரீநகரின் தனித்துவமான பாரம்பரிய காஷ்மீ்ர் நடனங்கள்எனப் பாரத தேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் சங்கமிக்கும் அரிய காட்சி திருமலையில் மட்டுமே சாத்தியம்!இது வெறும் நடனம் மட்டுமல்ல; ஒவ்வொரு குழுவும் தங்கள் நடன அசைவுகளுக்குள்ளும், முக பாவனைகளிலும் ஒரு சிறிய ஆன்மீகக் கதையையோ, புராண நிகழ்வையோ நாடகமாக நடித்துக் காட்டுகின்றன.இறைவனின் லீலைகள், பக்தர்களின் பக்திப் பரவசம், தர்மத்தின் வெற்றி ஆகியவற்றைச் சில நிமிடங்களில் அவர்கள் கண்முன்னே கொண்டு வரும் பாங்கு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்கள் அணிந்து வரும் பிரம்மாண்ட வேடங்களும், வர்ணஜால ஆடைகளும், துல்லியமான மேக்கப்பும் தேவலோகத்தையே திருமலைக்கு இறக்கி வைத்தது போலப் பிரமாதமாக இருக்கின்றன.பாரத நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்து பார்க்க வேண்டிய கலை வடிவங்களை, திருமலை மாட வீதியில் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு திருமலை தேவஸ்தானத்தின் மூலம் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளது. இது சாதாரணக் காட்சி அல்ல; ஏழுமலையான் தன் பக்தர்களுக்கு வழங்கும் பெரும் பேறு!ஏழு நாட்கள் நடந்து முடிந்திருக்கும் இந்த ஆன்மீகக் கலைத்திருவிழா, 'வேற்றுமையில் ஒற்றுமை' காணும் இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தையும், இறை வழிபாட்டில் கலைகள் வகிக்கும் முக்கியத்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சொல்கிறது. கோவிந்தனின் அருளோடு இந்த கலை விருந்தைக் காண்பதே ஒரு தனித் தவம்!-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை