UPDATED : மே 02, 2026 02:59 PM | ADDED : மே 02, 2026 02:55 PM
தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது மெலட்டூர். ஊரின் பெயரைச் சொன்னாலே பாகவத மேளா மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுவே அந்த ஊரின் அடையாளமாக ஆகியிருக்கிறது.சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இது, நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆதரவுடன் செழித்தோங்கியது. ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு குடிபெயர்ந்த கலைஞர்களால் இக்கலை மெலட்டூரில் நிலைநிறுத்தப்பட்டது.'பாகவதர்'கள் (பக்தர்கள்) சூத்ரதாரியாக இருந்து, கதை சொல்லி, நாடகத்தை நடத்துவதால் இது பாகவத மேளா என்றழைக்கப்படுகிறது.இது பக்தி, இசை, நடனம் மற்றும் நாடகம் கலந்த ஒரு கோவில் கலை வடிவமாகும். தெலுங்கு மொழியில் அமைந்த இந்த நாடகங்களில் ஆண் கலைஞர்கள் மட்டுமே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி, அங்குள்ள வரதராஜ பெருமாள் சன்னதியில் இரவு முழுவதும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன. கலைஞர்கள் இதனை ஒரு பக்தியாகவே கருதி, ஊதியமின்றி நடிக்கின்றனர். பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று நடிப்பது இதன் தனிச்சிறப்பு.பிரஹலாத சரித்திரம், ருக்மாங்கதா சரித்திரம், மார்கண்டேய சரித்திரம், ஹரிச்சந்திரா போன்றவை முக்கிய நாடகங்களாக அரங்கேற்றப்படுகின்றன.இதில் பிரஹலாத சரித்திரம் மிகவும் பிரபலமாகும்.இந்தக் கலை, பரதநாட்டியம் மற்றும் யக்ஷகானம் ஆகியவற்றின் கலவையாகவும், பழங்கால சமஸ்கிருத நாடக மரபுகளைத் தமிழ்நாட்டில் தக்கவைத்துள்ள ஒரு முக்கிய கலை வடிவமாகவும் பார்கப்படுகிறது.இந்த வருடம் மெலட்டூரில், பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இரணியனை நரசிம்மர் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரஹலாத சரித்திரம் இரவு 10 மணிக்கு துவங்கி காலை 5 மணி வரை நடைபெற்றது.பாரம்பரிய எண்ணெய் விளக்குகளின் திரி ஒளியிலும் பாரம்பரிய உடைகளிலும் நடைபெற்ற நாடகத்தை விடியும் வரை அமர்ந்து பார்வையாளர்கள் ரசித்தனர். தொடர்ந்து அரிச்சந்திர நாட்டிய நாடகமும், ஹரிஹர லீலா விலாச நாட்டிய நாடகம், ருக்மணி கல்யாண நாட்டிய நாடகங்கள் நடைபெறவுள்ளது.படங்கள்,கட்டுரை;தஞ்சாவூர் சுந்தர்ராஜன்