இந்த வருட மகா சிவராத்திரிக்கு சிவன் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிவன் கோவில்களில் மட்டுமின்றி தனி சிவன் சன்னதியுள்ள வடபழநி ஆண்டவர் கோவில் போன்ற தலங்களிலும் நல்ல கூட்டம்.
கபாலீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாகியது ஆனால் பக்தர்களும் அசராமல் நீண்ட வரிசையில் நின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் பிரம்மாண்டமான அரங்கு அமைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முதல் நாள் மாலை 6 மணிக்கு நாதஸ்வரத்துடன் துவங்கிய நிகழ்ச்சி நாட்டியம்,பக்தி பாடல் கச்சேரி,சொற்பொழிவு,பரத நாட்டியம்,வில்லுபாட்டு என்று பல்வேறு நிகழ்வுகளுடன் நேற்று இன்று காலை 6 மணி வரை நடந்தது.
ஆறு வயதே ஆன சிறுமி தியாவின் வாய்பாட்டும்,சுபஸ்ரீ தணிகாசலத்தின் சிவன் புகழ் பாடும் திரை இசைப்பாடல்களும்,பாரதி பாஸ்கரின் சொற்பொழிவும் சிறப்பாக இருந்தது.அதிலும் சுபஸ்ரீ தணிகாசலம் ஒவ்வொரு பாடலுக்கும் கொடுத்த விளக்கங்கள் அடேங்கப்பா ரகம்.நிகழ்ச்சிகளை சுருக்கமாகவும் திட்டமிட்டும் வடிவமைத்திருந்தனர்.வாழ்த்துரை பொன்னாடை போர்த்துதல் போன்று போராடிப்பு இல்லாமல் கலைஞர்கள் நேரிடையாக விஷயத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.பல்வேறு குழுக்கள் நடன நிகழ்ச்சிகள் நடத்தினாலும் ஒவ்வொரு குழுவினரும் தனித்தன்மையுடன் நடனங்களை வழங்கினர்.இது போல பக்தியை வளர்க்கும் நிகழ்வுகள் பரவலாக எல்லா கோவில்களிலும் நடத்தப்படவேண்டும் என்பதே பக்தர்களது விருப்பமாக உள்ளது.--எல்.முருகராஜ்.