UPDATED : டிச 23, 2025 02:55 PM | ADDED : டிச 23, 2025 02:53 PM
இன்றைய நவீன உலகில், முதியவர்கள் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனிமைச் சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். உறவுகள் அருகில் இருந்தாலும், உரையாடல்கள் இல்லாத சூழலில் அந்தத் தனிமை மிகக் கொடியது. முதியவர்களின் இந்த மௌனமான வலியைப் போக்கப் பிறந்ததுதான் 'ரெண்டெவர்' (Rever).அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி (MIT) பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், 2016-ல் ஒரு சேவை மனப்பான்மையுடன் உருவாக்கியதுதான் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) தளம். கடந்த எட்டு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்ட இந்தக் கருவி, இன்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முதியோர் இல்லங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது.ஜாய்ஸ்டிக் தேவையில்லை: மற்ற VR கருவிகளைப் போலச் சிக்கலான பட்டன்கள் ஏதுமின்றி, குரல் வழி அல்லது எளிமையான சைகைகள் மூலம் இதை இயக்கலாம் என்பது முதியவர்களுக்குப் பெரிய பிளஸ் பாயிண்ட்இந்தக் கருவியை ஒரு 'கால இயந்திரம்' என்று அழைக்கலாம். ஏனென்றால், இது முதியவர்களை அவர்களின் இளமைக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டது.கண்களை மறைப்பது போலத் தலையில் அணிந்துகொள்ளும் இந்த 'ரெண்டெவர்' கருவி, ஒரு மந்திரக்கோல் போலச் செயல்படுகிறது. 'எனக்குப் பிடித்த ஊருக்கு அழைத்துச் செல்' என்று நீங்கள் கட்டளையிட்டால் போதும்; அடுத்த நொடி நீங்கள் பிறந்த கிராமத்திலோ அல்லது நீங்கள் விரும்பிய புனிதத் தலத்திலோ நிற்பது போன்ற உணர்வைத் தரும்.தொலைக்காட்சியோ, மொபைல் திரையோ தராத ஒரு அதிசயத்தை இது நிகழ்த்துகிறது. இதில் காட்சிகளைப் பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட இடத்திற்கே நீங்கள் நேரில் சென்றுவிட்டது போன்ற பிரமையை (360-degree experience) இது ஏற்படுத்தும். மெல்லிய உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு என இது தரும் அனுபவங்கள் ஏராளம். இந்தக் கருவியைத் தலையிலிருந்து கழற்றும்போதுதான், இவ்வளவு நேரம் ஒரு மாய உலகில் இருந்தோம் என்பதே நமக்குத் தெரியும்.இதன் மற்றொரு சிறப்பம்சம், பல முதியவர்கள் ஒரே நேரத்தில் ஒரே காட்சியைப் பார்க்க முடியும். இதன் மூலம், அவர்கள் அந்த அனுபவத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும், குழுவாகச் செயல்படவும் முடிகிறது. இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, சமூகத்தோடு இணைந்திருக்கும் உணர்வைத் தருகிறது.உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதால், மனநல மருத்துவர்களே இந்தக் கருவியைப் பரிந்துரைக்கின்றனர். இதன் இந்திய விலை சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தியாவில் இப்பதுதான் இதைப் பற்றிய பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.விரைவில் இந்தியச் சந்தையிலும் இது பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் வீட்டுத் தாத்தா - பாட்டிக்கு விலைமதிப்பற்ற, மகிழ்ச்சியான ஒரு பரிசை வழங்க விரும்புபவர்கள், தாராளமாக இந்த 'ரெண்டெவர்' உலகைப் பரிசீலிக்கலாம்.- எல். முருகராஜ்