UPDATED : ஆக 15, 2025 09:35 PM | ADDED : ஆக 15, 2025 09:32 PM
திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில், சித்தர் மயாண்டியின் கனவு வழியாக உருவான புண்ணிய தலம். இது பக்தர்களுக்கு அமைதி, நம்பிக்கை மற்றும் அன்பை வழங்கும் திருத்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் சிறப்பானது.நாளை (16.08.2025) நடைபெறவுள்ள கிருஷ்ண ஜெயந்தி விழாவில், பக்தர்களுக்கு சிறிய, நடுத்தர மற்றும் பெரிய பானைகளில் இனிப்புகள் நிரப்பி பிரசாதமாக வழங்குவர். அந்த பானைகளை வெறும் பானைகளாக அல்லாமல், அதில் அழகான கிருஷ்ணர் ஓவியங்களையும் வரைந்து தருவார்கள்.இந்த பானைகளில் வரையப்படும் கிருஷ்ணரின் ஓவியங்கள் மிக நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் இருக்கும் என்பதால், பல பக்தர்கள் பிரசாத பானையை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வர்.இந்த அற்புத ஓவியங்களை வரைந்து தருபவர் சந்தோஷ் கோபால். இவரது பூர்வீகம் கேரளா; தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் வசிக்கிறார்.சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் ஓவியப் பயிற்சியும் பெற்றார். ஆனால் தனது வாழ்க்கைப் பாதையை சினிமா இயக்கம் நோக்கி திருப்பி, அதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.'கற்ற கலையை விட்டுவிடக் கூடாது' என்ற எண்ணத்தால், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில், வருமானத்திற்காக அல்லாது, மனநிறைவுக்காகவே ஓவியங்களை வரைந்து வருகிறார்.இதுவரை ஆயிரக்கணக்கான பானை ஓவியங்களை வரைந்துள்ளதோடு, கிருஷ்ணர் மட்டுமின்றி முருகன்,விநாயகர்,ராமர் உட்பட பல தெய்வங்களின் படங்களையும் வரைந்துள்ளார்.'பக்தர்கள் இந்தப் பானைகளை புனிதமாக போற்றி பாதுகாத்து வருவதைக் காணும் சந்தோஷத்திற்காகவே, இந்தக் கோவிலுக்குத் தேவையான பானை ஓவியங்களை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்' என சந்தோஷ் கோபால் கூறினார்.தொலைபேசி: 98941 38045படங்கள்: செந்தில் விநாயகம்- எல். முருகராஜ்