UPDATED : மார் 16, 2026 07:44 PM | ADDED : மார் 16, 2026 07:42 PM
காஷ்மீர்,ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டதை அடுத்து, வண்ணமயமான மலர்களைக் கண்டு ரசிக்கத் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் திரண்டு வருகின்றனர்.துலிப் என்பது 'லில்லி' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை மலர் செடியாகும். இவை ஆசியாவைத் தாயகமாகக் கொண்டவை. ஸ்ரீநகரில் உள்ள இந்தத் தோட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். இது ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில், உலகப்புகழ் பெற்ற தால் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தோட்டத்தில் பல லட்சம் துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும்.துலிப் மலர்கள் பொதுவாக வசந்த காலத்தில் மட்டுமே பூக்கும் இயல்புடையவை. மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் இறுதி வரை மட்டுமே இவை மலர்ந்திருக்கும். ஒரு துலிப் செடியின் மலர் பூத்த பிறகு, அது வெறும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே பொலிவுடன் இருக்கும். அதன்பின் அவை உதிர்ந்துவிடும். இத்தோட்டம் சுற்றுலாப் பயணிகளுக்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை சுமார் 20 முதல் 30 நாட்கள் மட்டுமே இத்தோட்டம் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் செடிகளைப் பராமரித்தல், புதிய செடிகளை நடுதல் மற்றும் அடுத்த வசந்த காலத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற பணிகள் காரணமாக தோட்டம் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.ஆக இன்றிலிருந்து இருபது நாட்களுக்கு திறந்திருக்கும் துலிப் மலர் தோட்டத்தை காண இப்போதே திட்டமிடுங்கள்.-எல்.முருகராஜ்