UPDATED : டிச 26, 2025 06:01 PM | ADDED : டிச 26, 2025 05:59 PM
திருநெல்வேலி என்றால் ஜங்ஷன் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சித்த மருத்துவ கல்லூரி போன்று தனித்துவமாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் இடமாகிவிட்டது பொருநை தொல்லியல் அருங்காட்சியகம்.பொருநை என்பது தாமிரபரணி ஆற்றின் பண்டைய பெயர்தான்.அந்தப் பெயரிலேயே தற்போது நெல்லையில் அமநை்துள்ள அருங்காட்சியகம் பொதுமக்களின் மகத்தான் வரவேற்பை பெற்றுள்ளது.மதுரை -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலையை கடக்கும் பகுதியில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம்.திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருந்தபோது அவர் எண்ணத்தில் உருவான திட்டம் இது.கீழடி அகழாய்வு தேசிய அளவில் தமிழ் மண்ணின் பெயரை உயர்த்திய போது பொருநை கரையிலும் இத்தகைய நிகழ்விட அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய அனைத்து அகழாய்வு மையங்களும் தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலேயே உள்ளன.ல் மத்திய அரசு ஆதிச்சநல்லூர் சர்வதேச அருங்காட்சியகம் திட்டத்தை அறிவித்ததால் தமிழகத்தின் சார்பில் கீழடியை போல ஒரு பொருநை அருங்காட்சியத்தை திருநெல்வேலியில் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு முடிவு செய்தது.இதற்கு முன்னோட்டமாக வ.உ.சி மைதானத்தில் நடந்த ஒரு புத்தக கண்காட்சியில் கூட பொருநை அருங்காட்சியகத்தின் மாதிரிகள் தயார் செய்யப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.2023-ல் அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகளில் ரூ 67.25 கோடி மதிப்பில் திட்டத்தை செயல்படுத்தி தற்போது பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட்டுள்ளனர்.அறிமுக அரங்கில் 15 நிமிடம்வீடியோ படம் திரையிடப்படுகிறது. தொல்லியல் அறிஞர்கள் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இடையிடையே பேட்டி அளித்து பொருநை மண்ணில் நடந்த அகழாய்வுகள் குறித்தும் தொன்மை குறித்தும் கூறுகின்றனர். இது ஒரு துவக்க அறிமுகமாக சிறப்பானதாக உள்ளது.அடுத்து ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை மற்றும் இடையில் வந்த துலுக்கர்பட்டி ஆகிய நான்கு அரங்குகளிலும் அந்தந்த இடங்களில் கிடைத்த தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் குறித்து பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.5 டி தியேட்டரில் ஐந்திணை பற்றிய விஷயங்கள் வீடியோ காட்சிகளாக 10 நிமிடம் கண் முன் நிறுத்துகிறது. அதில் ஒரு விமானத்தில் பறந்த படி நம்மை மலை அருவியிலும் கடலிலும் காடுகளிலும் சுற்றி அழைத்துச் செல்வது போல கருப்பு நிற கண்ணாடி அணிந்து பார்க்கும் போது மிக அருமையாக உள்ளது.பாபநாசம் அருவியில் இறங்கும்போது நம் தலையில் நிஜமாகவே அருவி நீர் கொட்டுகிறது.கருப்பு கண்ணாடி அணிந்து சீட் பெல்ட் அணிந்து முன்பாக உள்ள கம்பிகளைப் பிடித்துக் கொண்டுதான் அந்த காட்சியை பார்க்க முடியும்.இதே போல 7 டி தியேட்டர் காட்சியும் மிக அருமையாக உள்ளது.தலையில் அதற்கான கருவியை மாட்டிக்கொண்டு படகில் அமர்ந்தால் போதும்,படகில் பொருநை நதியில் பயணிப்பது போல நாம் பயணிக்கலாம் ஆற்று மீன் உங்கள் முன் துள்ளிவிளையாடு கரையில் உள்ள யானைகள் துதிக்கையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் போது உங்கள் மீது நிஜமாகவே தண்ணீர் திவலைகள் படும் அதுதான் 7 டி மாயம்.இந்த 5 டி மற்றும் 7 டி க்கு நுழைவுக் கட்டணத்துடன் சிறப்பு கட்டணமும் உண்டு.உள்ளே மகளிர் சுய உதவி குழுவின் கேண்டீன் உள்ளது. போதுமான அளவு கழிப்பறைகள் உள்ளன. குடிநீர் வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட அறிவியல் மையம், வ உ சி மைதானம் போன்ற ஒன்று, இரண்டு சுற்றுலா மையங்களை மட்டுமே கொண்ட திருநெல்வேலிக்கு பொருநை அருங்காட்சியகம் ஒரு வரப்பிரசாதம் தான்..ததும்பி வழியும் தமிழரின் பெருமைகளைச் சொல்லும் பொருநை அருங்காட்சியகத்தைக் காண அழைக்கிறோம் அன்புடனேதகவல் :எஸ்.முப்பிடாதிபடம் :செந்தில் விநாயகம்