வெஸ்பா என்பது வெறும் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமல்ல; அது உலகளாவிய பேஷன், கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்தின் சர்வதேச அடையாளம். இரண்டாம் உலகப் போரின் இடிபாடுகளுக்கு நடுவே பிறந்து, இன்று 80 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகப் பயணிக்கும் வெஸ்பா, தனது 80-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இத்தாலி தலைநகர் ரோமில் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான திருவிழாவை நடத்தி வருகிறது., ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவிற்காக, ரோமின் புகழ்பெற்ற 'போரோ இடாலிகோ' வளாகம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு 'வெஸ்பா வில்லேஜ்' ஆக உருவாக்கப்பட்டுள்ளது.உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெஸ்பா கிளப் உறுப்பினர்களும், பல்லாயிரக்கணக்கான வெஸ்பா ரசிகர்களும் தங்களது சொந்த ஸ்கூட்டர்களுடன் ரோமில் குவிந்துள்ளனர். பொதுமக்கள் தங்களது பிரியமான வெஸ்பா ஸ்கூட்டர்களை இந்த வெஸ்பா வில்லேஜ் முன்பாக அணிவகுத்து நிறுத்தும் காட்சிகள் பார்ப்போரைக் கவர்ந்து வருகின்றன. 1946-ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட விண்டேஜ் மாடல்கள் முதல் நவீன எலக்ட்ரிக் வெஸ்பாக்கள் வரை அனைத்தும் இங்கு பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.வெஸ்பாவைத் தயாரிக்கும் 'பியாஜியோ' நிறுவனம், தொடக்கத்தில் போர் விமானங்களைத் தயாரித்து வந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் இத்தாலி சந்தித்த வீழ்ச்சியால் பியாஜியோவின் தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. போருக்குப் பின், மக்கள் எளிதாகவும் மலிவாகவும் பயணிக்க ஒரு வாகனம் தேவைப்பட்டபோது, விமான வடிவமைப்பு பொறியாளரான கொராடினோ டி அஸ்கானியோ என்பவரால் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டது.விமானத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சங்கிலிகள் இல்லாத ஒரு முன்மாதிரியை உருவாக்கினர். அதன் அகலமான பின்பகுதியையும், மெலிதான நடுப்பகுதியையும் பார்த்த நிறுவனத்தின் வாரிசு என்ரிகோ பியாஜியோ, வியப்புடன் பார்க்க ஒரு குளவி போல இருக்கிறதே என்றார், இத்தாலிய மொழியில் 'வெஸ்பா' என்றால் 'குளவி' என்று பொருள். அதுவே அந்த வாகனத்தின் பெயராக நிலைத்துப்போனது.1953-ல் வெளியான உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'ரோமன் ஹாலிடே, நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் ரோமின் வீதிகளில் வெஸ்பாவில் பயணிக்கும் காட்சிகள் வெளியான பிறகு, வெஸ்பாவின் புகழ் உலகமெங்கும் பரவி, அது ஒரு ஸ்டைல் அடையாளமாக மாறியது.80 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழங்கால வெஸ்பா ஸ்கூட்டர்களை அவற்றின் உரிமையாளர்கள் இன்றும் மிகக் கவனமாகப் பராமரித்து, நல்ல ரன்னிங் கண்டிஷனில் ஓட்டி வருகின்றனர். அதே நேரத்தில், பியாஜியோ நிறுவனம் தனது பாரம்பரியமான 'வளைந்த எஃகு உடல்' டிசைனை மாற்றாமல், இன்றைய காலத்திற்கு ஏற்ப இரண்டு வடிவங்களிலும் வெஸ்பாவைத் தயாரித்து வருகிறது:இன்றும் உலகளவிலும் இந்தியாவிலும் வெஸ்பாவின் பெரும்பான்மையான விற்பனை பெட்ரோல் மாடல்களில்தான் நடக்கிறது.சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக அதிநவீன 'வெஸ்பா எலெக்ட்ரிகா' போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.80 ஆண்டுகளைக் கடந்தும், தலைமுறைகள் தாண்டியும் இளமை மாறாமல் பயணிக்கும் வெஸ்பா, இன்றும் உலகெங்கும் 2 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களுடன் சாலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ரோமில் தற்போது நடைபெறும் இந்த 80-வது ஆண்டு திருவிழா, வெஸ்பா உலக வரலாற்றில் என்றும் அழியாத ஒரு கலாச்சார அடையாளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது-எல்.முருகராஜ்