ஐக்கிய நாடுகள் சபையின் 'மக்கள் தொகை நிதியம்' அமைப்பு, 'இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்' என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை, 14.9 கோடி. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதம். 1,500 முதியோர் காப்பகங்கள்
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு, வங்கி கடன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன; இருக்கும் சில திட்டங்களும் போதுமானதல்ல.தமிழகத்தில் சுமார் 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். பெரும்பாலானவை கட்டண முறையிலானவை. முதியோர் காப்பகங்களில் லட்சக்கணக்கானோர் கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர். காப்பக முதியவர்கள் அனைவருமே வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அல்ல. 'தனக்கான மரியாதையில்லை' 'பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம்' என்பது போன்ற காரணங்களால் தாமாக வெளியேறியவர்களும், தவறுசெய்து விட்டுவீட்டை விட்டு ஓடி வந்தவர்களும் உண்டு.முதியோரில் பலரும் ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு இருந்தவர்கள். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஓராயிரம் கதைகள் இருக்கும். இள வயதில் அவர்களது கட்டுப்பாட்டில் தான் வீடே இருந்திருக்கும். அவர்கள் சொல்வதே முடிவு; வைத்ததே சட்டம் என வாழ்ந்தவர்கள். குடும்பத்துக்காக உழைத்தவர்கள். சுக துக்கங்களை தியாகம் செய்தவர்கள். இறுதி மரியாதை செய்ய கூட வருவதில்லை
முதுமையால் சம்பாத்தியத்தை இழக்கும்போது, உடல்வலு குறையும் போது வீட்டில் செல்லாக்காசாக பல நேரங்களில் துாக்கி வீசப்பட்டுவிடுகின்றனர். பாரமாக, தேவையற்ற சுமையாக பிள்ளைகள் பலரும் கருத துவங்கிவிடுகிறார்கள். வசதியற்றவர்கள் இலவச காப்பகங்களில் விட்டுவிடுகிறார்கள். சிலர் துரத்தி விடுகிறார்கள். ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு எங்களைப் போன்றவர்கள் பராமாரிக்கிறார்கள். வசதி படைத்தோர் 'பெய்டு ஹோம்'மில் சேர்த்து விடுகிறார்கள். இதுவும், பெற்றோரைக் கைவிடுதல் தான்.வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகள், உயிருக்கு போராடும் தங்கள் பெற்றோரை பார்க்கக் கூட வருவதில்லை. உயிரிழந்துவிட்டால் 'பணம் அனுப்புகிறேன்; அடக்கம் செய்து விடுங்கள்' என்கின்றனர். இறுதி மரியாதை செலுத்தக்கூட வருவதில்லை. காப்பக முதியோர்களை விட, வீட்டில் தனிமையில் இருப்போர் நிலைமை இன்னும் மோசம். தற்கொலை, இயற்கை மரணம் போன்றவை நிகழ்ந்தால் யாருக்கும் தெரிவதில்லை. துர்நாற்றம் வீசிய பிறகே அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர். உறவுகளை நினைத்து ஏக்கம்
காப்பக முதியோர் வெளிப்பார்வைக்கு நிம்மதியாக இருப்பது போன்று தோற்றமளித்தாலும் உறவுகளை நினைத்து அவர்கள் உள்ளுக்குள் உருகுவதை நாங்கள் நன்கறிந்திருக்கிறோம். முதியோர் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம் அவர்களுக்கு பயன்படாது. எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கும் மனமில்லை.கருவுற்ற பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக அரசாங்கம் போதுமான மருத்துவ உதவிகள், ஆலோசனைகளை வழங்குவது போன்று முதியோருக்கான திட்டத்தையும் அமல்படுத்தலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.இறுதியாக பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள்... தினமும் பெற்றோரிடம் சிறிது நேரம் மனம்விட்டு பேசுங்கள். வெளியூர்களில் வசித்தால்கூட போனில் நலம் விசாரியுங்கள். நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக கருதி துாக்கி வீசிவிடாதீர்கள். நாளை, நமக்கும் முதுமையுண்டு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்! கட்டுரையாளர், கோவை மாநகராட்சியின் ஆதரவற்றோர் காப்பகத்தை, 'ஈரநெஞ்சம்
அறக்கட்டளை' வாயிலாக பராமரிப்பவர்காப்பக முகவரியுடன் வாக்காளர் அடையாள
அட்டைபெற்று, ஓட்டுரிமையை செலுத்த வைத்தவர். சாலைஓரங்களில் ஆதரவின்றி
சுற்றித் திரிந்த 500க்கும்மேற்பட்டோரை மீட்டு சிகிச்சை அளித்து,
குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தவர்.- ப.மகேந்திரன்