1986ல் நடத்திய, 'ஹிந்து சமயத்தில் வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தலைப்பிலானபோட்டியில், சொற்பொழிவு நிகழ்த்தி தங்கப்பதக்கம்வென்றவர். பட்டிமன்ற நடுவர், சுபநிகழ்ச்சிகளின்வர்ணனையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.பேச்சுக்கலை என்ற புரிதலையும், மகத்துவத்தையும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை, அனைவருக்கும் இருக்கிறது. எண்ணங்களின் ஒழுங்கு வெளிப்பாடே பேச்சு; உள்ளத்தின் உண்மை ஒலியின் ஒழுங்கு வெளிப்பாடே பேச்சுக்கலை; ஆயக்கலைகள், 64ல், தனித்துவம் பெற்றது பேச்சுக்கலை.சிகாகோ மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை, இந்தியாவின் பாரம்பரியம், பண்பாட்டை வெளிப்படுத்தியது. விவேகானந்தர் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டவர் ஏராளம். சிந்தனை மற்றும் எண்ணத்தை துாய்மையாக்கும் வகையில், விழிப்புணர்வு எழச்செய்வதே பேச்சின் மகத்துவம்.பேச்சுக்கலை மீது, சிறு வயதில் இருந்தே ஆர்வம் பிறக்க வேண்டும். பெரிய பேச்சாளரின் ஆளுமையால் கவரப்படும்போது, ஒருவருக்குள் பேச்சுக்கலை வளர்கிறது.'பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர்' என்கிறது திருக்குறள்.பகைவர் அதிகம் உள்ள போர்க்களத்தில், அஞ்சாமல் சென்று சாகத்துணிந்தவர் பலர் இருக்கின்றனர்; கற்றவர் நிறைந்த அவையில் பேசும் வல்லமை பெற்றவர் சிலர் மட்டுமே என்று கூறும் திருக்குறள், பேச்சுக்கலையின் பெருமையை எடுத்துரைக்கிறது. அவையறிந்து பேசுக!
பேச்சுக்கலை என்பது, தடையின்றி வார்த்தைகளால் விளையாடுவது அல்ல; அவையறிந்து பேச வேண்டும்; அர்த்தமுள்ளதாகவும் பேச வேண்டும். எனக்கும் பேசத்தெரியும் என்று பயனில்லாமல் பேசக்கூடாது.மதிநுட்பத்தின் வெளிப்பாடாக பேச்சுக்கலை இருக்க வேண்டும்; அவையறிந்தும், பொருளறிந்தும் பேச வேண்டும். குறித்த நேரத்திற்குள், செய்திகளை ரத்தின சுருக்கமாக, பொருள் மாறாமல், இலக்கிய சுவையுடன் வழங்கும் ஆற்றல் தேவை; அதையே, தற்போதைய ரசிக பெருமக்கள் விரும்புகின்றனர். சுருங்க கூறுவதையே பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.பேசும் நபர்களுக்கு மட்டுமல்ல... அதை கேட்போருக்கும், ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் வெற்றியை கொடுப்பது பேச்சாற்றல்; அதற்காக தேடுதல் இருக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள விஷயங்கள் குறித்த ஞானம் தேவை; செய்தி களஞ்சியமாக இருக்க வேண்டும். வாசிப்பு அவசியம்
பேச்சாளர், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தலைசிறந்த பேச்சாளராக இருந்தாலும், தற்போதும் புதிதாக கற்றுக்கொண்டே தான் இருப்பார்கள். இளைஞர்களுக்கு, கற்க வேண்டும் என்ற வேட்கையும், தொடர்ச்சியான தேடலும் இருக்க வேண்டும்.இரவல் வாங்கி வந்த மூன்று புத்தகங்கள் மழையில் சேதமாகிவிட்டதால், தனது தந்தையுடன் சென்று, மூன்று நாட்கள் சம்பளமில்லாமல் வேலை பார்த்து, கடனை அடைத்தவர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அவரை போல், புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம், ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்று அவ்வையார் கூறியுள்ளார். புத்தக வாசிப்பு மட்டுமல்ல, பயிற்சியும் மிக முக்கியம். போட்டிகளில் பங்கேற்கும் போதுதான், புத்தக தேடல் துவங்கும்; ஆர்வம் பெருகும். தற்போதெல்லாம், பேச்சுப்போட்டி நடத்துவது குறைந்துவிட்டது. வெற்றிக்கு அடித்தளம்
கல்லுாரி காலத்தில், 200 பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றிருப்பேன். அவற்றில், 150 போட்டிகளில் தோல்வி மட்டும்தான்; பரிசு பெற முடியவில்லை. இருப்பினும், வெற்றியை நோக்கி பயிற்சி பெற்றதால், முன்னேறினேன். எந்தவொரு போட்டியாக இருந்தாலும், தோல்விகள் தான் மனதை பக்குவப்படுத்தும். அதிகப்படியான தோல்வியை சந்தித்தவர், இன்று வெற்றியாளராக இருக்கிறார்கள்.இன்றைய சமுதாயத்துக்கு ஏற்ப, புதுமையான சிந்தனைகளை, பேச்சின் மூலம் வழங்க வேண்டும். மாறாக, அரைத்த மாவையே அரைப்பது போல், பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருந்தால், பேச்சுத்துறையில் நீடித்து நிலைத்திருக்க முடியாது.பள்ளி, கல்லுாரிகளில், இலக்கிய மன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, பேச்சுக்கலையில் ஆர்வம் வளர்த்துவிட்டால், வாழ்வில் வெற்றியாளராக மாறும் தகுதியும் கிடைத்துவிடுகிறது.அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என, ஒவ்வொரு துறையிலும் பேச்சாற்றல் இருந்தால் சிறப்பு தகுதி கிடைக்கிறது. தனது கருத்துக்களை தெளிவாகவும், திடமாகவும் எடுத்துரைக்கும் ஒருவர்தான், 'டீம் லீடர்' என்ற உயர்நிலைக்கு வரமுடிகிறது. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது, பேச்சாற்றலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. சாதனை படையுங்கள்
கடமையை சரிவர செய்வது மட்டும் சிறப்பான வாழ்வியலாக இருக்காது; சாதனையாளராக உயர வேண்டும் என்ற அடிப்படை குறிக்கோள் அவசியம். குழந்தைகளுக்கு அத்தகைய ஆற்றலை வளர்க்க, பெற்றோர் முதலில் ஆர்வம் காட்ட வேண்டும். கல்வி மட்டும் முக்கியம் என்று இருந்துவிடக்கூடாது. ஆசிரியர்களும், கல்வியுடன், பேச்சுத்திறனையும் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம், இலக்கியத்துறை ஆசிரியர்கள் கையில் இருக்கிறது. தமிழகம் முழுவதும் பேச்சுக்கலை பரவும்போது, அடுத்து வரும் தலைமுறை இளைஞர்கள், ஒளிரும் விளக்காக மிளிர்வார்கள்!
கருவிலேயே சான்றோன்
பேச்சுப்போட்டியில் பங்கேற்பதன் வாயிலாக, குழந்தைகளின் மனப்பாடம் செய்யும் திறன் அதிகரிக்கிறது. திருப்புகழ், திருவாசகம், தேவாரம், பதிகங்கள், கீர்த்தனைகளை, மனனம் செய்து பேசவும், பாடவும், பெற்றோர் பயிற்சி அளிக்க வேண்டும்.கர்ப்பிணிகளுக்கு யோகா, உடற்பயிற்சி அளிப்பது வழக்கம். பேச்சாற்றல் மூலம், கருவில் இருக்கும் குழந்தைகளை சான்றோன் ஆக்கலாம். அதற்காக, கருவிலேயே சான்றோன் ஆக்கும் நிகழ்ச்சியையும், கம்பன் கழகம் நடத்தி வருகிறது.கர்ப்பிணிகளுக்கு, ஐந்து முதல் ஏழு மாதம் வரை பாடல், ஆன்மிகம், பேச்சாற்றல் மூலம் பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் குழந்தைகள், ஆரோக்கியமான மனதுடன் பிறக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு, மூன்று வயது வரை மட்டுமே, பெற்றோர் வழிகாட்டுகின்றனர். அதற்கு பிறகு, பள்ளி ஆசிரியர்கள் மூலம், பண்பாடு, ஒழுக்கம், கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், தொழில் ஆகிய ஐந்தும், தாயின் கருவறையில் நிர்ணயிக்கப்படுவதாக சாணக்கியர், பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அதன்படியே, கர்ப்பிணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மந்திரங்களால் தெய்வமாக மாறுகிறது, கருங்கல்; கருவில் மந்திர பாடல்களை கேட்பதால், உயர்ந்த தன்மையுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுக்கலாம்.- சோ.ராமகிருஷ்ணன்
கட்டுரையாளர், திருப்பூர் கம்பன் கழக செயலாளர். கிருபானந்த வாரியார், அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலையில் மேடைகளில் பேசி, வாழ்த்தும், பாராட்டும்பெற்றவர். காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்,