டில்லியில் ஒரு டெலிவிஷன் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில் நிற்பீர்களா? என்று நெறியாளர் கேட்டார். அந்த கேள்விக்கு நிர்மலா அளித்த பதில் இன்று உலகம் பூராவும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.'தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. தவிர, நீ என்ன மதம், என்ன ஜாதி என்றெல்லாம் கேட்பர். ஜெயிப்பதற்கான வேறு என்னென்ன தகுதிகள் இருக்கிறது என எடை போடுவர். அதெல்லாம் எனக்கு சரிப்படாது' என்பது அவர் பதில்.மேலோட்டமாக பார்க்கும்போது, மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தினார் என்று பாராட்ட தோன்றும். ஆனால் கவனிக்க வேண்டியவை, அமைச்சர் சொல்லாமல் உணர்த்திய நிதர்சனங்கள். தேர்தலில் நிற்க வேண்டும் என்றால், பணத்தை வாரி இறைக்க வசதி வேண்டும். வாக்காளர்கள் ஏற்றுக்கொள்கிற மதத்திலோ, ஜாதியிலோ பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதிகள் இல்லாத எவரும் தேர்தலில் நிற்க அருகதை அற்றவர்கள்.ஒவ்வொரு நாளும் காதுகள் நிரம்பி வழியும் வகையில் வார்த்தைகளால் போற்றப்படும் இந்திய ஜனநாயக தேர்தலின் உண்மையான உருவம் இதுதானா? அதிகார அமைப்பில் பங்கெடுப்பதன் வாயிலாக, நாட்டு மக்களுக்கும் பிறந்த மண்ணுக்கும் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை வெறும் கானல் நீரா?நிர்மலாவின் கணக்கு சரியாக இருந்தால், பீஹார் மாநிலத்தின் பாடலிபுத்ரா தொகுதியில் ராகேஷ் குமார் சர்மா சென்ற தேர்தலில் வென்றிருக்க வேண்டும். அவரது சொத்து மதிப்பு 1,107 கோடி. அமைச்சர் குறிப்பிட்ட, 'ஏனைய தகுதிகளும்' அவருக்கு இருந்தன. வெறும் 1,500 ஓட்டுகள் வாங்கி டிபாசிட் இழந்தார்.ஐந்து லட்சத்துக்கு குறைவான சொத்து இருந்தால் ஏழை என கணக்கிடுகிறது ஏ.டி.ஆர்., என்கிற ஜனநாயக சீரமைப்புக்கான சங்கம். கடந்த லோக்சபாவின் மிக ஏழையான உறுப்பினர்கள் லிஸ்டில் ஒன்பது பெயர்கள் இருந்தன. அதில் ஐந்து பேர் பாரதிய ஜனதா கட்சியினர். மூன்று பேர் பெண்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை சேர்ந்த மாதவி 2.50 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார். அவர் சொத்து மதிப்பு 1 லட்சத்து 20 ஆயிரம். நம் நிதியமைச்சர் 2.50 கோடிக்கு சற்று மேலாக சொத்து கணக்கு சமர்ப்பித்துள்ளார்.கோடீஸ்வர எம்.பி.,க்கள் எத்தனை பேர் என்று வெளிச்சம் போடும் ஊடகங்கள், தெருக்கோடி மட்டுமே அறிந்தவர்களை கண்டுகொள்வது கிடையாது. ஏழைகளை பற்றி தெரிந்து கொள்ள யாருக்கு சார் ஆர்வம் இருக்கிறது, என்பர்.முப்பது ரூபாய்க்கு முப்பாட்டன் வாங்கி போட்ட நிலத்தின் மதிப்பு, இன்று 30 கோடியாக உயர்ந்திருக்கலாம். அதில் வசிப்பதற்கு வீடு கட்ட வாங்கிய கடனுக்கு தவணை கட்ட வேட்பாளர் திணறிக் கொண்டிருப்பார். எனினும், கோடீஸ்வர வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இலவசமாக இடம் கிடைத்து விடும்.பணம் ஆறாக ஓடினாலும் அது மட்டுமே வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் மண்ணைக் கவ்விய கதைகள் ஏராளம். சபைக்கு உடுத்திச் செல்ல பழைய வேட்டியை துவைத்து உலர வைத்த அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். அந்த இனம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை.கட்சி நடத்தவும், தேர்தல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றவும் பின்னர் அதை தக்க வைக்கவும் பெரும் பணம் தேவை. ஆனால், அந்த கட்சிகளுக்கும் இத்தகைய எளியவர்கள், நல்லவர்கள், திறமையாளர்கள் தேவை. மக்களின் ஆதரவை பெறுவதற்கு கட்சிகளுக்கே இவர்கள் காந்தமாக பயன்படுகின்றனர்.எனவே தான் அவை ஒரு சிலரையாவது நேர்மையான அளவுகோலால் தேர்வு செய்து கட்சிப் பணத்தை செலவிட்டும், கட்சித் தொண்டர்களை களத்தில் இறக்கியும் கரை சேர்க்கின்றன. பெருவாரியான பிரஜைகளுக்கு இந்திய ஜனநாயகம் மீது நம்பிக்கை நீடிக்க இந்த சுயநலம் கைகொடுக்கிறது.அரசியல் சாக்கடை என்று கூறி விலகி செல்பவர்களுக்கும், அதை சுத்தம் செய்ய துணிந்து இறங்குபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான் 100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் அனைத்து மொழிகளிலும் பாட்டிசைக்கிறது.எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் சோர்ந்து போகாமல் எதிர்கொண்டு, தலைமையின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிர்மலா சீதாராமன், தன் சேவைக்கு மக்களின் அங்கீகாரத்தை நேரடியாக பெறும் வாய்ப்பை உதறியிருக்க வேண்டாம். கட்சியும் அவரை கைவிட்டிருக்க வேண்டாம்.