உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / கள்ளச்சாராய பலி சம்பவம்; விழிக்க வேண்டும் மாநில அரசு

கள்ளச்சாராய பலி சம்பவம்; விழிக்க வேண்டும் மாநில அரசு

கடந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில், 22 பேர் பலியாகினர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் மீண்டும் ஒரு கள்ளச்சாராய சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் நேற்று வரை, 57 பேர் பலியாகி உள்ளனர்; மேலும், 156 பேர் ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளச்சாராய சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், கள்ளக்குறிச்சி கலெக்டராக பணியாற்றியவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி., உட்பட பல அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையமும் விசாரணையை துவக்கி உள்ளது. இந்தப் பிரச்னையை சட்டசபையிலும் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில், கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனம், ஆரம்பத்தில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மதுக்கடைகளுக்கு சப்ளை செய்யும் பணியை மட்டுமே மேற்கொண்டு வந்தது. 2003ம் ஆண்டு முதல், 5,000த்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் வாயிலாக, மதுபானங்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால், கள்ளச்சாராய விற்பனை களைகட்டும் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதால் தான், டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக மதுபானங்கள் சில்லரை விற்பனையை அரசு துவக்கியது. ஆனாலும், 2012 முதல் 2019 வரை ஓய்ந்திருந்த கள்ளச்சாராய சாவுகள் மீண்டும் தலை துாக்கியுள்ளது, கவலை தரும் விஷயமாகும்.அதற்கு காரணம், வருவாயை கருத்தில் கொண்டு மதுபானங்களின் விலையை, அரசு பல மடங்கு உயர்த்தியதே. குவார்ட்டர் மது குடிக்க வேண்டும் எனில், டாஸ்மாக் பணியாளர்கள் வசூலிக்கும் பாட்டிலுக்கு, 10 ரூபாயையும் சேர்த்து, 150 ரூபாய் செலவிட வேண்டிய நிலையில், சாதாரண குடிமகன்கள் உள்ளனர். அதனால் தான், குறைந்த விலையில் விற்கும் கள்ளச்சாராயத்தை தேடிச் செல்கின்றனர். மேலும், கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பதற்கும் இந்த விலை உயர்வு முக்கிய காரணமாகும். குஜராத், பீஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில், மதுவிலக்கு அமலில் உள்ளது. இருந்தும், அங்கும் கள்ளச்சாராய சாவுகள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளன. அதனால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் எனில், குறைந்த விலையில், தரமான மதுபானங்களை விற்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், கள்ளுக் கடைகளையாவது திறக்க வேண்டும். அப்போது தான், குறைந்த விலையில் விற்கப்படும் கள்ளச்சாராயம் என்ற விஷச்சாராயத்தை மது குடிப்போர் நாடுவது தடைபடும். அதுமட்டுமின்றி, தற்போது கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகளை கைது செய்வதுடன், அவர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கடுமையாக தண்டிக்கும் வகையில், சட்ட விதிகளையும் மாநில அரசு உருவாக்க முன்வர வேண்டும். அதேநேரத்தில், கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையையும் ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லையெனில், அடுத்தடுத்து நடக்க உள்ள தவறுகளுக்கு முன் உதாரணமாகி விடும். இதுதவிர, மெத்தனால் போன்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்பிரிட் போன்றவை, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு எளிதில் கிடைக்காத வகையில், தடை செய்யப்பட வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தனிப்பட்ட பிரிவே செயல்பாட்டில் இருந்தும், தற்போதைய துயர சம்பவம் நடந்துள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும். அரசு நிர்வாகத்தின் செயலற்ற தன்மையே இதற்கு காரணம். இனியும் இதுபோன்ற துயர சம்பவம் நடக்காமல், தமிழக அரசு இனியாவது விழிப்புடன் செயல்பட்டு, அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை