டிஜிட்டல் கைது மோசடி: விழிப்புணர்வு அவசியம்!
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி குறித்து, சமீபத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், 'இந்த வகையான மோசடி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இதன் மூலம், நம் நாட்டில் மட்டுமே 3,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி தருவதாக உள்ளன. அதிலும், வயதானவர்களை குறிவைத்து இந்த மோசடி நிகழ்த்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது' என, தெரிவித்துள்ளது. அத்துடன், 'இந்த மோசடி சம்பந்தமாக, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற விவகாரங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பெரும் பிரச்னையாக உருவெடுத்து விடும்' என்றும் கூறியுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், போலியான நீதிமன்ற உத்தரவுகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் தன்னை மிரட்டி, 1 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். அதுவே, இந்தப் பிரச்னை விஸ்வரூபமாக காரணமாக அமைந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்பது, காவல் துறை, சி.பி.ஐ., சுங்கத்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து, அப்பாவிகளை தொலைபேசியில் மிரட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி, பணம் பறிக்கும் சைபர் குற்றம். இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் பயத்தையும், அவநம்பிக்கையையும் பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது. இத்தகைய மோசடியில் பணத்தை பறிகொடுப்பவர்கள், பண இழப்பை சந்திப்பதுடன், மனரீதியான குழப்பங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் ஆளாகின்றனர் என்பது துயரம் தரும் விஷயம். போலீசாரும், இதர சட்ட அமலாக்கத் துறையினரும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' குறித்து, அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக எச்சரித்தாலும், மோசடி பேர்வழிகள் தங்களின் அணுகுமுறைகளை மாற்றி, பல்வேறு வடிவங்களில் மோசடி செய்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக, 2022ல் 10.29 லட்சமாக இருந்த சைபர் குற்றங்கள், 2024ல், 22.68 லட்சமாக அதிகரித்துள்ளன. நம் நாட்டில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளோர், 'இன்டர்நெட்' பயன்படுத்து கின்றனர். இது, சைபர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக அமைந்துள்ளது. சைபர் குற்றவாளிகள் ஒருவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டும் போது, அதை உண்மை என நம்புவோர், பல நாட்கள் துாக்கமின்றி தவிப்பதுடன், அன்றாட பணி களையும் கவனிக்க முடியாத நிலைமைக்கு ஆளாகின்றனர். இத்தகைய மிரட்டல்களுக்கு ஆளானவர்கள் சாதாரண நபர்கள் தான் என்றில்லை. உயர் பதவி வகிப்பவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மோசடி பேர்வழிகளால் மிரட்டப்பட்டு பணத்தை இழந்துள்ளனர். அதனால் தான், இந்த டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட சைபர் குற்றங்களை, உச்ச நீதிமன்றம் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. 'இத்தகைய குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும்' என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதாகவும், அவர்களை தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும், புலனாய்வு துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், மோசடி நபர்கள் செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக, போலீசார் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்கள் புரிந்து, மிகவும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். அத்துடன், சைபர் குற்றங்களை கையாளும் பிரிவினரும், சில உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது கட்டாயம். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளதால், இனி இத்தகைய குற்றங்கள் குறையும் என நம்பலாம்.