பொது சிவில் சட்டம் அமல்: உத்தரகண்ட் அரசுக்கு பெருமை!
'நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்' என, 2024ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பா.ஜ., அறிவித்தது. ஆனாலும், தேசிய அளவில் இன்னும் பொது சிவில் சட்டம் அமலாகவில்லை. அதற்கான நடவடிக்கைகளை, மத்திய பா.ஜ., அரசு எடுக்கவும் இல்லை.அதே நேரத்தில், பா.ஜ., ஆளும் மாநிலமான உத்தரகண்டில், பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு, சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன் வாயிலாக, 2022ல் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது அளித்த வாக்குறுதியை, முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு காப்பாற்றியுள்ளது.உத்தரகண்ட் மாநில அரசின் பொது சிவில் சட்டமானது, திருமண பதிவுகள், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்து பங்கீடு, உயில்களை ரத்து செய்வது உட்பட பல விதமான சட்ட விவகாரங்களை உள்ளடக்கியதாகவும், இந்த பிரச்னைகள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் உத்தரகண்ட் அரசின் நடவடிக்கை, மற்ற மாநிலங் களுக்கு ஒரு முன்னோடியாகும். அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களை மேற்படுத்தும் நோக்கத்துடனும், சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், இந்த விஷயத்தில் உத்தரகண்ட் அரசு அடியெடுத்து வைத்துள்ளது.ஆனாலும், ஒரு சிறப்பான, பிரமாண்டமான உணவு தயாரிப்பில், சில இடுபொருட்களை சேர்க்க மறந்தது போன்று, பொது சிவில் சட்டத்தில் சில குறைபாடுகளும் உள்ளன. அதாவது, திருமணங்களை பதிவு செய்வது கட்டாயம், பலதார திருமணத்திற்கு தடை, நிக்கா ஹலாலா மீதான தடை, பெற்றோரின் திருமண நிலையை பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு சமமான வாரிசு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட சில துணிச்சலான முடிவுகள், பொது சிவில் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு விவகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.அதனால், உத்தரகண்ட் அரசின் சட்டமானது, பெரிய அளவிலான சீர்திருத்தத்தை ஏற்படுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் அது போன்று இல்லை. சின்ன சின்ன ஒட்டு வேலைகள் செய்தது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.மேலும், பொது சிவில் சட்டமானது, மாநிலத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் பொருத்தமானதாகவும், பொதுவானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், உத்தரகண்டில் வாழும் பழங்குடியினர்களுக்கு இந்தச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டிருப்பது, சில சந்தேகங்களை எழுப்புகிறது.அத்துடன், இந்த சட்டமானது சட்டசபையில் விரிவாக விவாதிக்கப்படாமல், அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும், சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்றும், போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில், ஆபத்தான சில விதிகள் இடம் பெற்றுள்ளதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. மேலும், திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதும், அதற்கு உடன்படாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதும், சேர்ந்து வாழ்வதை தடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் வாரிசு தொடர்பான சில சட்டப் பிரிவுகளும், காலனி ஆதிக்க கால சட்டங்களை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல விமர்சனங்கள் எழுந்தாலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம், முதல் அடியை எடுத்து வைத்துள்ள மாநிலம் என்ற பெருமை உத்தரகண்டிற்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் நேரத்தில், மாநில அரசு துணிச்சலான, புதுமையான சில நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.